விஜய் படத்துக்கு பாடல் எழுதும் போது செய்யப்பட்ட அரசியலால் தான் வருந்திய சம்பவம் தொடர்பாக பாடலாசிரியர் பிரியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் “வேலாயுதம்” படம் வெளியானது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். அந்தாண்டு தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம் முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க ஆக்ஷன் என திரைக்கதையோடு கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இப்படியான நிலையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆகியது. விஜய் கேமியோ ரோலில் நடித்த சுக்ரன் படத்தில் தான் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைத்தார் விஜய் ஆண்டனி. இதனையடுத்து 3வது முறையாக இந்த இருவரும் கூட்டணி அமைத்தனர். அப்படத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி கவிஞர் பிரியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதாவது, “நான் விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் பாட்டு எழுதினேன். அதில் நான் எழுதியது தான் ஓப்பனிங் பாடலாக வரவேண்டியது. ஆனால் அங்கேயும் அரசியல் செய்யப்பட்டது. அதில் “வேலா வேலா” பாடல் தானே விஜய்யின் அறிமுக பாடலாக இருக்க வேண்டியது. எப்போதுமே ஹீரோ அறிமுக பாடல் டைட்டில் வைத்து தானே வரும். நீங்கள் அந்த படத்தில் பார்த்தால் வேறு பாடல் இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் அங்கு மிகப்பெரிய அரசியல் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒரு படத்தில் பாடல் எழுதுவதற்கும், விஜய் படத்துக்கு எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்குல. நான் இதையெல்லாம் பார்த்து விட்டு பரவாயில்லை என விட்டுவிட்டேன். ஆனால் விஜய் ஆண்டனி சாருக்கு கோபம் வந்து விட்டது.
அவர் என்னிடம், ‘இல்ல பிரியன். இந்த பாடல் தான் டைட்டில் பாடலாக வந்திருக்க வேண்டும். நான் படம் முழுக்க வைக்கிறேன்’ என சொல்லிவிட்டு கிட்டதட்ட 30 இடங்களில் வைத்து விட்டார். அந்த பாடல் வரிகளாகவும், பிஜிஎம் ஆகவும் கோபத்தில் வைத்தார் விஜய் ஆண்டனி. நாங்கள் இருவரும் முடிவு பண்ணிய பிறகு அதில் வேறொரு பிரச்சினை வருகிறது. விஜய் படத்தில் பாட்டு எழுதவே அரசியல் பண்ணுகிறார்கள் என்றால் நம்ம படம் பண்ண வரும்போது என்னவெல்லாம் செய்வார்கள். இதை நாகரிகம் கருதி, சினிமாவில் இதெல்லாம் சகஜம் என வளைந்து கொடுத்து செல்வார்கள் என நினைக்கிறார்கள்” என பிரியன் தெரிவித்திருந்தார்.
வேலாயுதம் படத்தில் அறிமுக பாடலாக “சொன்னா புரியாது” பாடல் இடம் பெற்றது. இப்பாடலை சிவா சண்முகம் என்பவர் எழுதிய நிலையில் விஜய் ஆண்டனியும்,வீர சங்கர் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.