தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வரும் நடிகர் கவின் தன்னுடைய படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய கவின் படிப்படியாக முன்னேறி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்.  வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இன்று பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 


 




கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டாடா' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. கவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குநர் இளனுடன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. மே 10ம் தேதியான இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் கவின் தன்னுடைய ரசிகர்களுடன் வீடியோ மூலம் பேசியுள்ளார். திருச்சியில் அவர் படித்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அங்கிருந்து அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


 "படம் வெளியாவதற்கு முன்னர் வீடியோ மூலம் உங்களை அணுகலாம் என நினைத்தேன். படத்தின் ப்ரோமோஷனுக்காக திருச்சி வந்த போது இங்கு இருந்து பேசினால் பர்சனலாக எனக்கு அது சந்தோஷமாக இருக்கும் என நினைத்தேன். என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலேயே கஷ்டம், கவலை என எதை பற்றியுமே கவலை இல்லாமல் இருந்த ஒரு காலகட்டம் என்றால் அது என்னுடைய ஸ்கூல் டேஸ் தான். வாழ்க்கையை பற்றிய பயணம், அடுத்து என்ன நடக்கும் என்ற கவலை என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஜாலியாக மட்டுமே இருக்கும் காலகட்டம் அதுவாக மட்டுமே இருக்க முடியும். அப்படி பட்ட இடம் தான் இந்த இடம். 


 



 


நம்மை அடுத்து எந்த இடத்துக்கு கொண்டு போகிறது என தெரியாமல் சர்ப்ரைஸ் நிறைந்தது தான் வாழ்க்கை. அப்படி பல சர்ப்ரைஸ்களை தாண்டி எங்கிருந்து இந்த வாழ்க்கை ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நான் இப்போது நிற்கிறேன். இது அனைத்திற்கும் நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் காரணம். ஜெயிப்பது தோற்பது என அனைத்தையும் தாண்டி எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பது தான் முக்கியம். ஏதோ செய்து இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் என்னுடைய பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து தூக்கிவிட்டு தட்டி கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை திட்டி அடித்த என்னுடைய ஆசிரியர்களும் நன்றி. 



வெற்றி தோல்வி பற்றி எல்லாம் யோசிக்காமல் நம்பியுடன் ஓடுவது தான் என்னை பொறுத்தவரையில் 'ஸ்டார்'. அப்படி நம்பிக்கையுடன் ஓடும் அனைவரும் இந்த 'ஸ்டார்' திரைப்படம் ஏதாவது ஒரு வகையில் கனெக்ட்டாகும் என நம்புகிறேன். நல்ல படங்களை ஆடியன்ஸ் என்றுமே கைவிட்டது கிடையாது. அந்த வகையில் நான் நடித்ததில் 'டாடா' படத்திற்கு பிறகு 'ஸ்டார்' படம் நிச்சயம் நல்ல ஒரு படமாக அமையும், உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என பேசி உள்ளார் நடிகர் கவின்.