கவின்


விஜய் டிவியில் ஒளிபரபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பரவலான கவனமீர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்தன. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். இந்தப் படம் பெரியளவில் கவனிக்கப் படவில்லை, கடந்த ஆண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தது.


சமீபத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குநர் ஜெய் நேர்காணல் ஒன்றில் பேசியபோது ப்ளூ ஸ்டார் படத்தின் முதலில் கவின்  நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவரது பிஸியான ஷெட்டியூல் காரணமாக இந்தப் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து தற்போது அவர் நடித்து வரும் படம் ஸ்டார். 


 ஒரு நடிகனின் கதை




பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன் இயக்கும் இரண்டாவது படம் ஸ்டார். கவின் கதாநாயகனாக நடிக்க அதிதி எஸ் போஹன்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக சிவாஜி கணேசனும் சுருளி நாச்சியாரும் என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்டார் படத்தில் இவர் ஜிமிக்கி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்கள் முன்பாக படக்குழு தகவல் வெளியிட்டது. யுவன் ஷங்கர்  ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். 


பாரதியார் ஸ்டைலில்  ப்ரோமோ


 நடிகனாக ஆசைப்படும் ஒரு இளைஞனை மையப்படுத்திய படமாக ஸ்டார் படம் உருவாகிறது. முன்னதாக இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காலேஜ் சூப்பர்ஸ்டார் என்கிற பாடல் வெளியாகி கவனமீர்த்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் இளன் மற்றும் கவின் ஆகிய இருவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியது, சுருட்டை முடியுடன் கூலான லுக்கில் கவின் இந்த போஸ்டரின் இருந்தது அனைவரையும் கவர்ந்தது. இது தொடர்பாக இயக்குநர் இளன் கூறியபோது “ மூன்று வருடத்திற்கு முன்பு நான் நினைத்த காட்சி ஒன்றை படமாக்கியுள்ளேன்.” என்றார்.  ஸ்டார் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கவின்


உன் கன்னிவெடிகள் யாவும் என் பாதத்தை பதம் பார்க்கலாம்


என் எண்ணங்கள் வெடிக்குமே 


என் செய்வாய் தோழனே


நூறாயிரம் பாதங்கள் என்னை மிதித்து நின்றாலும் 


ஓராயிரம் யானைகளின் பலம் கொண்டு எழுந்து நிற்பேனே


என வசனம் பேசியபடி காட்டப்படுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பின்னணியில் ஒலிக்க உணர்ச்சிவசமாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.