கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள டாடா படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பெரும் பிரபலமடைந்தவர் கவின். விஜய் தொலைக்காட்சி வழியே கால் பதித்து ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி தொடர்கள் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னரே சீரியல் உலக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற கவின், தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா, லிஃப்ட் படங்கள் மூலம் சினிமாவில் கவனமீர்க்கத் தொடங்கினார் கவின்.
இந்நிலையில், கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ பட புகழ் அபர்ணா தாஸூடன் டாடா படத்தில் கமிட் ஆனார் கவின்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் பாக்யராஜ், ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரீஷ், ‘வாழ்’ பிரதீப், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளது. ஜென் மார்ட்டின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டாடா எ சாங் பாடல் ரிலீசாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது டாடா பட டீசர் வெளியாகி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.
காமெடி ஜானரில் தந்தை - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.