1996-ஆம் ஆண்டு. இயக்குநர் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் ஒரு புது டிரெண்டை உருவாக்கியது. ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்துக்கொள்ளாமல் தூரத்தில் இருந்தே காதலித்து வருவது. அழகைப் பார்த்து காதலிக்காம மனதைப் பார்த்து காதலிப்பதே காவியக் காதல் என்கிற கருத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த டிரெண்டில் வெளியாகி இதை கடந்து மேலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது ஒரு படம்.


காதலர் தினம்


1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதலர் தினம். குனால், சொனாலி பிந்த்ரே , மணிவன்னன்,  நாசர், சின்னி ஜயந்த் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது காதலர் தினம் திரைப்படம்.


இன்று மீண்டும் இந்தப் படத்தை எடுத்து பார்க்க நேர்ந்தால் படத்தின் பல காட்சிகள் சலிப்பைத் தருகின்றன. திரைக்கதை இன்னும்கூட சற்று கச்சிதமாக அமைந்திருக்கலாம் என்கிற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் இத்தனை குறைகளை கண்முன் வைத்திருக்கும் ஒரு படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது என்கிற கேள்வியும் சேர்ந்து எழுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் காட்டப்பட்ட உலகம்.


இணையதளத்தின் வருகை


சமூக வலைதளம் இன்று நம் வாழ்வில் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் இது எல்லாம் இல்லாமல் முகம் பார்க்க வாய்ப்பில்லாமல் காதல் செய்துவந்தவர்களுக்கு இணையதளம் எவ்வளவு பெரிய ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும் . இந்தியாவில் 2000 இல் இருந்து அதன் தொடக்கம் என்று சொல்லலாம்.  மக்களுக்கு முற்றிலும் புதிதான ஒரு இணையதள உலகத்தை அறிமுகப் படுத்தியது காதலர் தினம் படம். ஒரு பெண்ணை கோவிலில், கல்லூரியில், ரயிலில் பார்த்து அவளைப் பிடித்துப்போய் அவளை தேடிச் சென்று கடைசியாக அவளுக்கு லவ் லெட்டர் கொடுத்து வந்த தமிழ் சினிமா கதாநாயகர்களின் உழைப்பை எல்லாம் வீண் என்பது போல் மாற்றியது காதலர் தினம் . இந்த உலகத்தில் எங்கோ ஏதோ ஒரு மூலையில்  இருக்கும் ஒர் பெண்ணை பார்த்து அவளுடன் பேசி பழகி அவளிடம் தனது காதலை வெளிப்படுத்த முடியும் என்பது சாத்தியம் என்பதை முதல் முறையாக மக்கள் பார்த்து தெரிந்துகொண்டார்கள். அப்படியான இரண்டு நபர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து வெளிவந்து தங்கள் காதலில் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா என்பது பார்வையாளர்களுக்கு நவீன யுகத்தின் மேல்  நம்பிக்கை  வருவதற்கு தேவையானதாக இருந்தது.


ஏ.ஆர்.ரஹ்மான்


களத்தில் அப்போது தான் புதிதாக இறங்கியிருந்த ரஹ்மானுக்கு பாடல்களில் செய்துகாட்டுவதற்கு நிறைய இருந்தது. ஒன்று இரண்டு மூன்று என படத்தின் மொத்த ஆல்பத்தையும் ஹிட் கொடுத்தார். காதலர்கள் ஒரு கிரிட்டிங் கார்டும் ரோஜாவையும் கையில் வைத்துக்கொண்டு தங்களுக்கான ரோஜா இந்த உலகத்தின் எந்த மூலையில்  காத்திருக்கிறாள் என்று இனையதளத்தில் தேடுவதற்கு இந்தப் பாடல்கள் உதவின.


இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்வது படம் மட்டும் இல்லை, படத்தின் ஆல்பமும்.