ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மஹான் ஆகிய இரு படங்களுன் ஓடிடியில் வெளியாகிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிகர்தண்டா திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாகிறது. அதே போல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தோஷ் நாராயாணன் இசையில் வெளியாகும் படம் இது என்பதும் குறிப்பிடத் தக்கது.


நான்கு நாள் வசூல் 


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் Sacnilk தளத்தின் நிலவரப்படி, முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ 2.41 கோடி வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இரண்டாவது நாளில் 4.86 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 7.2 கோடி என மொத்தம் மூன்று நாட்களில் ரூ 14.47 கோடிகளை வசூல் செய்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதனைத் தொடர்ந்து நேற்று நவம்பர் 13 ஆம் தேதி அதிகபட்சமான வசூலை ஈட்டியுள்ளது ஜிகர்தண்டா படம். இந்தியாவில் மட்டுமே ரூ 7.25 கோடி வசூல் செய்துள்ளது. 


வசூலை தக்கவைத்துக் கொள்ளுமா?






தீபாவளியை ஒட்டிய தொடர்ச்சியான விடுமுறைகளை ஒட்டி வெளியானதால் இந்த வெற்றியை எட்டியுள்ளது படம். இனி வரும் நாட்களில் விடுமுறைகள் இல்லாதது படத்தின் வசூலை பாதிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதும் பார்வையாளர்களின் வருவதைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஐந்தாவது நாளாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு 21 சதவீதம் மட்டுமே திரையரங்கத்தில் பார்வையாளர்கள் வந்துள்ளதாக சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. 


எதிர்ப்பார்ப்புகளை மீறிய வெற்றி


பெரும்பாலான எதிர்பார்ப்புகள் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் மேல் இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ 23.47 கோடிகளை வசூல் செய்துள்ள ஜிகர்தண்டா திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி இலக்கைத் தொட்டுள்ள நிலையில், இனி வரும் வாரங்களிலும் அதே வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.