தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அந்தஸ்த்தை பெற்றுள்ள இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் இளைஞர் கார்த்திக் சுப்பராஜ். ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்று திரைத்துறையில் இயக்குநர்களாக அடையாளம் காணப்பட்ட கார்த்திக் சுப்பராஜ் ஒரு ஐடி ப்ரொஃபெஷனல் என்பது பலரும் அறிந்து இருக்க கூடும்.  


சினிமா மீது ஆர்வம் கொண்ட இளம் இயக்குநர்களின் தேடுதல் வேட்டையை 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி மூலம் கண்டறிந்தது கலைஞர் தொலைக்காட்சி. நலன் குமாரசாமி, ராம்குமார், பாலாஜி மோகன், அருண்குமார் என பல இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அந்த நிகழ்ச்சி மூலம் கவனத்தை ஈர்த்தவர் தான் கார்த்திக் சுப்பராஜ். 


 



2012ம் ஆண்டு வெளியான ஸ்மால் பட்ஜெட் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான 'பீட்சா' மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க அடுத்ததாக இயக்கிய 'ஜிகர்தண்டா' படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் படங்கள் என்றாலே ரசிகர்களின் ஆர்வம் எகிறும் அளவிற்கு எதிர்பார்ப்பை கூட்டினார். அந்த வரிசையில் வந்தது தான் இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள். தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக வெளியான ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் திரைப்படம்  மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. 


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் திரையுலகில் வருவதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். 


'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான சமயத்தில் நான் ஐடியில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு பிளாக் எழுதும் பழக்கம் இருந்தது. அந்த படத்தை பார்த்த பிறகு நான் என்னுடைய ப்ளாக்கில் மிகவும் ஃபீல் பண்ணி எழுதி இருந்தேன். அதில் வரும் ஒரு சில வசனங்கள் என்னை மிகவும் பாதித்தது. 
"ஐடி துறையில் இருந்து வந்து வீட்டு வாடகையை எல்லாம் ஏத்தி விட்டு போயிடுறீங்க. இதை மற்றவர்களால் கொடுக்க முடியுமா? வாடகை மட்டும் அல்ல மொத்தமா வாழ்வாதாரத்தையும் மற்ற எல்லா விஷயங்களின் விலையையுமே நீங்கள் ஏற்றிவிடுவதால் மற்றவர்கள் தானே அதனால் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற ஒரு வசனம் இருக்கும். அதை கேட்கும் போது எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த வசனம் உண்மைதானே. அந்த சமயத்தில் நான் வேலையை விட்டுவிடலாம் என்றெல்லாம் தோன்றியது. அது போல பல திரைப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து இருந்தார்.