ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா , நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. 


குவியும் பாராட்டும் வசூலும்


முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ 2.41 கோடி வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இரண்டாவது நாளில் 4.86 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 7.2 கோடி என மொத்தம் மூன்று நாட்களில் ரூ 14.47 கோடிகளை வசூல் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 


பாராட்டுக்களைப் பெறும் நடிகர்கள்


ஜிகர்தண்டா படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை  இயக்கிய படங்களில் சிறந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர் நடித்திருக்கும் அல்லியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். எப்போதும்போல் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 


நவீன் சந்திரா


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் டி எஸ்.பி ரத்னகுமாரின் கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரத்னாவாக நடித்திருந்த தெலுங்கு நடிகர்  நவீன் சந்திரா படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். “கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே அது என்ன மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் தான் நடிக்கத் தயாராக இருந்ததாக” அவர் தெரிவித்தார். இந்தப் படத்தைப் பார்த்து பலர் தன்னை வெறுத்ததாகவும், என்னைக் கொல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியதகாவும் அவர் தெரிவித்தார். ஒரு கதாபாத்திரத்தை வெறுத்தாலும்  ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.


”பொதுவாகவே வில்லன் கதாபாத்திரங்களுக்கு போதுமான காட்சிகள் இருப்பதில்லை. அனால் இந்தப் படத்தில் எனக்கு நிறைய காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகள் எல்லாம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதால் என்னால் இந்தக் கதாபாத்திரத்திற்குள் முழுமையாக ஈடுபட முடிந்தது. ஒரு படைப்பாளி எனக்கு ஒர் கதாபாத்திரம் கொடுக்கிறார் என்றால், அவர் மனதில் இருக்கும் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக அவர் கண் முன் நிறுத்துவது ஒரு நடிகரின் கடமை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்