வெற்றிமாறன் ஒரு முறை கார்த்திக் நரேனை சந்தித்து அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். நிறைய பயணம் செய்யுங்கள், சினிமாவை இன்னும் கற்றுக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்தார். அவரின் அட்வைஸ் கார்த்திக் நரேனை எப்படி மாற்றியிருக்கிறது என்பது ஃபிலிம் கம்பேனியனுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, “ கல்லூரியில் நாம் படித்துக்கொண்டிருக்கும் போது நமது ஆசிரியர் நமது தவறுகளை எடுத்துச்சொல்லி, அறிவுரை கூறுவார்கள்.
ஆனால் நாம் அறிவுரையை பட்டு தெரியும் வரை கேட்கமாட்டோம். பின்னர் தவறு செய்து மாட்டிக்கொள்ளும் போது அவர் சொன்னதை கேட்டிருக்கலாம் என்று தோன்றும். இப்போது வெற்றிமாறன் சொன்ன அட்வைஸ் எனக்கு அப்படிதான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு மாஃபியா படம் வெளியான பின்னர்தான் வந்தது. இப்போது எனக்கு கேப் கிடைத்தால் அவரது அட்வைஸை எடுத்து கொள்வேன் என்றார். ஆனால் குறிப்பிட்ட அறிவுரை என்னவென்று அவர் குறிப்பிடவில்லை. மேலும் பேசிய அவர்,
“துருவங்கள் பதினாறு” “ நராகாசுரன்” போன்ற படங்களை எனது சொந்த வாழ்கையின் அனுபவத்தில் இருந்து எடுத்தேன். துருவங்கள் பதினாறு படத்தில் மாற்றுத்திறனாளி சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் எனது அப்பா அது தொடர்பான துறையில் இருப்பதால் அதிலிருந்து வந்தது. எனது உறவினர் வீட்டுக்கு நான் செல்லும் போது அவர்கள் எனக்கு நிறைய பேய் கதைகள் சொல்வார். அதிலிருந்து உருவானதுதான் நராகசுரன். ஆனால் மாஃபியாவில் அது கொஞ்சம் மாறியது. என்னுடைய சினிமா கேரியரில் நான் எல்லாத்தையும் பார்த்துவிட்டேன். என்னுடைய ஒரு படம் நன்றாக ஓடியிருக்கிறது, ஒரு படம் சரியாக போகவில்லை, ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.” என்று பேசினார்.