தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என உருவாகியிருந்த இந்தப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படம் வெளியாகிய ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அதற்குள்ளே இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆம் இப்படம் “ஆஹா தமிழ்” எனும் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. அந்த அறிவிப்பு தொடர்பான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
திரையரங்களில் சர்தார் பெற்ற வெற்றி :
சர்தார் படத்தின் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மக்கள் மீது படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட பிரின்ஸ் படமும் மக்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றதால், அடுத்தடுத்த காட்சிகளில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமானது.
வெளியான 2 வது வாரத்திலேயே உலகளவில் சுமார் 80 கோடியை வசூல் செய்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடியை வசூலை எட்டியது என்ற அதிகாரபூர்வமான தகவலும் வெளியானது. இந்த ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு அந்த பட்டியலில் "சர்தார்" திரைப்படமும் இணைந்துள்ளது.
படத்தின் வெற்றியையொட்டி, அந்த படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார், டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றையும் பரிசளித்தார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.
சர்தார் 2 :
முன்னதாக பேசிய கார்த்தி ”சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.” என்று கார்த்தி பேசினார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.