தீரன் அதிகாரம் ஒன்று


கமர்ஷியல் திரைப்படங்களில் மிகப்பெரிய சலிப்பாய் இருபது ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதைகளில் புதுமையாக எதுவும் நமக்குத் தெரிவதில்லை என்பதுதான். யாரோ ஒருவர் எழுதிய கதையின் ஆயிரத்து ஒன்றாவது நகலாக தான் பெரும்பாலான படங்களின் காட்சியமைப்புகள் இருக்கின்றன. இந்த வரையறைக்கு உட்பட்டு அதில் சில புதிய முயற்சிகளை செய்யும் படங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற தவறுவதில்லை. அப்படியான ஒரு படம்தான் தீரன் அதிகாரம் ஒன்று.



சதுரங்க வேட்டைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எச் வினோத் தன்னுடைய இரண்டாவது படமாக தீரன் படத்தை இயக்கினார். கார்த்தி , ரகுல் ப்ரீத், போஸ் வெங்கட் அபிமன்யு சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற தீரன் படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 


விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்


ராஜஸ்தானை பூர்வீமாகக் கொண்ட பவாரியாஸ் ஒவ்வொரு ஊராக சென்று கொடூரமான கொலைகளை செய்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பலை ஒரு காவல் அதிகாரி தேடிப்போகும் கதை தீரன் அதிகாரம். பொதுவாக இந்த மாதிரியான கமர்ஷியல் படங்களில் அதிகப்படியாக ஆக்‌ஷன் காட்சிகளையே நாம் எதிர்பார்ப்போம். ஒவ்வொரு காட்சியும் அடுத்து அடுத்து என விறுவிறுப்பை நோக்கி மட்டுமே செல்வதில் குறிக்கோளாக இந்த மாதிரியான படங்கள் எடுக்கப்படும். தீரன் படம் மற்ற இன்வெஸ்டிகேஷன் படங்களைக் காட்டிலும் வேறுபடுவது ஒரு விசாரணையை வெறும் விறுவிறுப்பான காட்சிகளாக மட்டுமில்லாமல் அதை ஒரு பயணமாக காட்டுவதில்தான்.


வெவ்வேறு நிலப்பரப்புகளில் இந்த திருடர்களை தேடிச்செல்லும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தையும் இந்த ஆபத்துக்குள் கொண்டு வந்து குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான். ஒவ்வொரு காட்சிகளுக்கு பின்னும் மிக ஆழமான ஒரு திரைக்கதை அமைந்திருப்பதை ஒரு பார்வையாளராக நம்மால் உணரமுடியும்.


ஜிப்ரானின் இசை, சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு,  கார்த்தியின் நடிப்பு ஆகிய அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தன.


விமர்சனங்கள்


தீரன் படம் வெளியான சமயத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தை குற்றவாளியாக இந்தப் படம் சித்தரிக்கிறது என்று படத்தின் மேல் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முழுமையான ஆராய்ச்சி செய்யப்பட்டு போதுமான தரவுகளின் அடிப்படையில் இந்தப் படம் இயக்கப்பட்டதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்  வரலாற்றின் ஒரு சிறு பகுதியை முடிந்த அளவிற்கு நியாயமாக புனைவாக்க முயற்சித்திருப்பதாக படத்தின் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் மம்மூட்டி நடித்து மலையாளத்தில் வெளியாகி இருந்த கன்னூர் ஸ்குவாட் திரைப்படம் தீரன் படத்தின் திரைக்கதையுடன் ஒத்திருப்பதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.