மெய்யழகன்
தமிழில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி , ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கார்த்தி முன்னதாக நடித்த கொம்பன் , விருமண் ஆகிய படங்களைப் போல் ஆக்ஷம் திரைப்படமாக இல்லாமல் இப்படம் உணர்வுப் பூர்வமான ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதை படத்தின் டீசரில் பார்க்க முடிகிறது. மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் தற்போது தொடங்கியுள்ளன. மெய்யழகன் படத்தைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் 96 இரண்டாம் பாகத்தைப் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
96 இரண்டாம் பாகம்
விஜய் சேதுபதி , த்ரிஷா நடித்த 96 திரைபடம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. பள்ளி பருவத்தில் காதலித்த இருவர் வளர்ந்த பின் மீண்டும் சந்தித்துக் கொள்வதே இப்படத்தின் கதை. கடைசிவரை தனது முதல் காதலை சுமந்து இருக்கும் நாயகன். தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின் தன் முன்னாள் காதலனை சந்திக்கும் போது நாயகிக்கு ஏற்படும் உணர்வெழுச்சிகள் என ஒரு காதல் காவியமாக இப்படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி ராம் த்ரிஷா ஜானுவாக இந்த கதாபாத்திரங்களை நம் கண்முன் நிறுத்தினார்கள். கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம்குமார் " 96 இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை நான் எழுதி முடித்துவிட்டேன். படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன். என்னுடைய அடுத்த படமாக இப்படத்தை எடுக்க நினைத்திருக்கிறேன் . விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகிய இருவரின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படத்தின் வேலைகள் துவங்கிவிடும் " என அவர் தெரிவித்துள்ளார்.