ஜப்பான்


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜப்பான்” (Japan). கார்த்தியின் சினிமா கேரியரில் 5வது தீபாவளி ரிலீசாக இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 


குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட சமூக கருத்துக்களை உள்ளடக்கியப் படங்களை இயக்கிய ராஜூ முருகன் முதல் முறையாக முற்றிலும் கமர்ஷியல் என்டர்டெயினராக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஜப்பான் திரைப்படம் மற்றும் தன்னுடையப் படங்களைப் பற்றிய பார்வையை  நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.


சமரசம் பற்றி


பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுக்கும்போது, நடிகருக்காக தன்னுடைய கதைகளில் சமரங்கள் செய்துகொள்வது குறித்து பேசிய ராஜூ முருகன் “ முதலில் நீங்கள் எந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்கப் போகிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். உங்கள் கதையை உங்களது தனித்துவமான எழுத்திலும் அதே  நேரத்தில் கதாபாத்திரங்களுக்கான நியாயத்தை வைப்பதும் முக்கியம். இதை நீங்கள் தெளிவாக புரிந்து வைத்திருந்தால் உங்கள் படத்தில் சமரசத்திற்கான தேவைகள் இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.


ஜிப்ஸி எனக்கு ஒரு நல்ல பாடம்


ராஜூ முருகன் இயக்கிய ஜிப்ஸி படம் அதிகம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இது குறித்து பேசியபோது ராஜூ முருகன் இவ்வாறு கூறியுள்ளார் “ ஜிப்ஸி படத்தில் நான் பெரும்பாலும் சமரசம் செய்துகொண்டேன்.  இங்கு ஒரு சிஸ்டம் இருக்கிறது. அந்த சிஸ்டம் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதும் முக்கியம் .  நம்மால் முடிந்த அளவிற்கு அந்த அமைப்புடன் போராடியும் சமரசம் செய்தும்தான் நாம் நம்முடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது.” என்றார்


உங்கள் கருத்தை வெளிப்படுத்த தயங்காதீர்கள்


தன்னுடைய கருத்துக்களை தன்னுடைய அரசியலை தான் செல்லும் இடங்களில் எல்லாம் தயங்காமல் பேசி வருபவர் ராஜூ முருகன் . இந்த தைரியம் அவருக்கு எப்படி வருகிறது என்கிற கேள்விக்கு “எப்போது பொதுச் சமூகத்திற்கு பயந்து உங்களது கருத்தை வெளிப்படுத்த நீங்கள் தயங்கவே கூடாது. உதாரணத்திற்கு இப்போது நீங்கள் ஒரு வீடியோ யூடியூபில் போட்டால் அதற்கு வரும் கமெட்களை நீங்கள் சென்று பார்க்கக்கூடாது. பொதுச்சமூகம் என்பது பல்வேறு மனங்களால் அமைந்தது. அதில் ஒரு நல்லவன் இருப்பான்.. ஒரு கெட்டவன் இருப்பான்.. அதனால் அதை எல்லாம் உங்களால் திருப்திபடுத்த முடியாது. உங்களது வேலையை நேர்மையாக செய்துவிட்டு நீங்கள் நகர்ந்து விட வேண்டும்” என்று ராஜூ முருகன் கூறியுள்ளார்