பாலிவுட் சினிமா உலகில் நடிகைகளின் வயது முதிர்ச்சி எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது குறித்து கரீனா கபூர் மனம் திறந்து பேசியுள்ளார்.


அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


41 வயது நடிகை, 2 குழந்தைகளின் தாய்




'3 இடியட்ஸ்' திரைப்படத்துக்குப் பிறகு நடிகை கரினா கபூர் இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.


இச்சூழலில், 41 வயது நிரம்பியவரும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தவருமான நடிகை கரீனா கபூரிடம் ”பாலிவுட் சினிமாவில் நடிகைகளின் வயது முதிர்ச்சி எவ்வாறு பார்க்கப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.


இந்தக் கேள்விக்கு பதிலளித்த கரீனா, ”இதுகுறித்து சமூக வலைதளங்களில் தான் விவாதிக்கப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் இல்லை. இது ஒரு நல்ல தலைப்பு என்பதால் தொடர்ந்து மக்கள் இதனை விவாதித்து வருகின்றனர்.


நீங்கள் நீங்களாக இருங்கள்...






ஆனால் நாங்கள் இங்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீங்கள் திறமையானவராக இருந்தால் உங்களுக்கு இங்கு வேலை நிச்சயம். நீங்கள் நீங்களாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும்.


வயது வெறும் எண்ணிக்கை தான். வயதைத் தாண்டி பலரும் பலவித கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நான் என் கர்ப்ப காலத்தில்கூட பணியாற்றி உள்ளேன்.


கர்ப்பிணியாக இருந்தபோதும் நடித்தேன்...


 






நான் முன்னதாக 5 அரை மாதம் கருவுற்றிருந்தபோது அமீர்கானுடன் நடித்துள்ளேன். அலியா தற்போது கருவுற்றிருக்கிறார். அதே சமயம் நடிகையாகத் தொடர்ந்தும் வருகிறார். 


எனவே எல்லைகளை உடைத்து சவாலை ஏற்றுக் கொள்வது அந்தந்த நபர்களின் கையில்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


’லால் சிங் சத்தா’ படம் தமிழ் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ள நிலையில்,  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.


ஹாலிவுட் பட ரீமேக்


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ’ஃபாரஸ்ட் கம்ப்’ எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது.


நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.


லால் சிங் சத்தா படம் திரையரங்கில் வெளியாகி அடுத்த ஆறு மாதங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.