ஏபிபி நெட்வொர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த நிகழ்வானது, வரப்போகும் நாடாளுமன்ற  தேர்தலுக்கு முன்னர் மக்களின் எண்ணம் குறித்த விரிவான விவாதங்களுக்கான முக்கிய தளமாக செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இந்தியாவின் சமூக அரசியல் நிலப்பரப்பின் பன்முக பரிமாணங்களை ஆராய்வதற்காக பங்கேற்றுள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவின் ஆளுமை பற்றின நுணுக்கமான சொற்பொழிவை வளர்ப்பதற்கு முதன்மையான முயற்சியாக இது உள்ளது. 




மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கரீனா கபூர் கலந்து கொண்டார். சினிமாவில் எந்த அளவிற்கு நடிகைகள் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "பல வலிமையான பெண்கள் வலிமையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். வெகுஜன மக்கள், பார்வையாளர்கள், திரையுலகத்தினர், விமர்சகர்கள், பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஈட்டும் படங்கள் என அனைவரும் விரும்பும் படங்களில் நடித்துள்ளனர். 


மேலும் கங்கனா ரனாவத், வித்யா பாலன், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகள் அல்லது நானாகவே இருந்தாலும் படத்தின் நடிக்கும் கதாபாத்திரங்களை உயர்த்தி காட்டும் வகையில் நடிக்க முயற்சி செய்துள்ளோம். இது தொழித்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது. அதனால் நடிகைகள் தங்களின் கேரக்டர், சம்பளம் மற்றும் முக்கியத்துவம் என ஒட்டுமொத்த இயக்கவியலை மாற்றியுள்ளது. இது போல பல விஷயங்கள் தொழில் துறையில் வித்தியாசத்தை கொண்டுவந்துள்ளது. இது திரையுலகின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது. 


கரீனா கபூர் தற்போது தபு மற்றும் கிருத்தி சனோன் உடன் இணைந்து நடித்துள்ள 'க்ரூ' படத்தை உதாரணமாக காட்டி திரைப்படங்களை ஆண் பெண் மையமாக கொண்ட படங்கள் என முத்திரை குத்தும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். 


 



'க்ரூ'  திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது. இதில் மூன்று விமான பெண்களாக நான், தபு மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ளோம். இது மக்களை பற்றிய படம். மக்களின் பிரச்னையை பற்றி பேசும் படம், இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக நான் பார்க்கவில்லை. அதை போய் பாருங்கள், ரசியுங்கள். ஆனால் அதற்கு ஏன் ஒரு பெயரை வைக்கிறீர்கள். சமூகத்தின் ஒரு பகுதியைப் பேசும் ஒரு படம் அவ்வளவுதான். 


அதே போல ஒரு கதாநாயகியின் வயதை ஸ்டீரியோடைப் செய்வது குறித்து கரீனா பேசுகையில் "இன்றைய பார்வையாளர்களும் அதை ஏற்று கொள்கிறார்கள். வயதான தோற்றம் வந்து விட்டது, உடல் அதற்கு ஏற்றார்ப்போலதான் இருக்கும். ஊடகம் நம்மை எப்போதும் நம்மை பார்த்து கொண்டே இருக்க வேண்டும், அதனால் நான் 21 வயதுபோல இருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. 21 வயதாக நான் இருந்ததை காட்டிலும் 40 வயதில் நான் மிகவும் அமைதியாக, மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என பேசி இருந்தார்.