தர்மா ப்ரோடக்‌ஷன்ஸ் எடுத்த அதிரடி முடிவு


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. திரையரங்கில் வெளியாவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக அந்த படம் பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு திரையிடப் படுகிறது. படத்தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த படத்தின் விமர்சனம் முன்பாகவோ அல்லது படம் வெளியாகும் நாளிலோ வெளியிடப்படுகிறது. இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ள பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகருக்கு சொந்தமான தர்மா ப்ரோடக்‌ஷன்ஸ். அதாவது இனிமேல் திரையரங்கில் வெளியாவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படும் சிறப்பு திரையிடலானது இனிமேல் நடைபெறாது. தர்மா ப்ரோடக்‌ஷன்ஸின் இந்த முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.


என்ன காரணம்


பாலிவுட் திரைத்துறை குறிப்பாக தர்மா ப்ரோடக்‌ஷன்ஸ் மீது எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. தங்கள் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு பாசிட்டிவு விமர்சனங்களை வெளியிடச் சொல்லி விமர்சகர்களுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சோசியல் மீடியா பிரபலங்கள் ஒரு படத்தைப் பற்றி விமர்சனம செய்யவும் அந்த படத்தை ப்ரோமோட் செய்யவும் 15 முதல் 60 ஆயிரம் வரை பணம் பெறுவதாக சமீபத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரவேண்டும் என்பதற்காக இந்த சோசியல் மீடியா பிரபலங்களுக்கு பணம் கொடுத்து ப்ரோமோட் செய்யும் வழக்கத்தை கடைபிடித்து வருவதாக கூற்றம்சாட்டப்பட்டது. 


ஒரு படத்திற்கு பாசிட்டிவு ரிவியூ கொடுக்க முடியும் என்றால் அதே மாதிரி பணம் கொடுத்து ஒரு படத்தைப் பற்றி நெகட்டிவ் ரிவியுவையும் பரப்ப முடியும் இல்லையா. அதுவும் நடந்து தான் வருகிறது. இந்த ஆபத்தை தடுக்கதான் தர்மா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஒரு படத்தை ரசிகர்கள் பார்த்து அவர்கள் நன்றாக இருக்கிறது என்று  சொல்வது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


விமர்சகர்கள் எதிர்ப்பு


தர்மா ப்ரோடக்‌ஷன்ஸின் இந்த திடீர் முடிவு ஒரு தரப்பினரால் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. போலி விமர்சகர்களை தவிர்க்கும் பொருட்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு சில  நேர்மையான விமர்சகர்களையும் பாதிக்கும். சிறப்பு திரையிடல் நிகழ்வு என்பது பத்திரிகையாளர்களும் படக்குழுவினரும் சந்தித்து உரையாடிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. ஒரு படத்தை இரண்டு நாட்கள் முன்பே பார்ப்பதால் விமர்சகர்களுக்கு அந்த படத்தைப் பற்றி பொறுமையாக யோசித்து விமர்சனத்தை எழுதும் அவகாசத்தை கொடுக்கிறது. மக்களுக்கு ஒரு படத்தின் மீது கவனம் ஏற்படுவதற்கு விமர்சகர்களின் கருத்து மிகமுக்கியமானது என பிரபல விமர்சகர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பாலிவுட்டைத் தொடர்ந்து தமிழில் இந்த நடைமுறை கடைபிடிக்க படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.