இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிமுகமாக மாறியிருக்கும்  ‘காந்தாரா’ திரைப்படம் கோவை ஈஷா மையத்தில் திரையிடப்பட்டுள்ளது. 


ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தப்படம் கொடுத்த தாக்கம் காரணமாக பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். 


 


                                                   


அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 


 






இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். மேலும் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.


மேலும்  ‘காந்தாரா’  படத்தின் தாக்கம் காரணமாக கர்நாடக அரசு  60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு  மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்தப்படத்தை பார்த்த காஷ்மீர் ஃபைல்ஸ்  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நெகிழ்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில் இந்தப்படம் தீபாவளி தினமான நேற்றைய தினம்  (அக்டோபர் 24-2022) கோவை ஈஷா மையத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னடத்தில் ஹிட்டான "காந்தாரா" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.


 






தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பலே பிலிம்ஸ்  குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினருக்கும், ரிஷப் ஷெட்டி அவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தை ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.