திரையரங்கத்தையே அதிரவைத்த 'காந்தாரா' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

  
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து அவர்களின் தயாரிப்பில் அடுத்து வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வரும் 'காந்தாரா' திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 


 



 


அனைத்து மொழியிலும் அமோக வெற்றி :


கன்னடத்தில் வெளியாகி எதிர்பார்ப்பையும் தாண்டி அமோகமான வரவேற்பை பெற்ற 'காந்தாரா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். 


 






 


பாராட்டு மழையில் நனையும் ரிஷப் ஷெட்டி:


பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். திரை பிரபலங்கள் பலரும் நேரடியாகவும் சோசியல் மீடியா மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை ரிஷப் ஷெட்டிக்கு தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பு, சிறப்பான திரைக்கதையை படமாக்கியதற்காக கோல்ட் செயின் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


ஓடிடியில் வெளியாக தயாரான காந்தாரா :
  
சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்துள்ள 'காந்தாரா'  திரைப்படம் ஓடிடி தளம் மூலம் மக்களை சென்றடைய தயாராகிவிட்டது.  தரமான திரைப்படம் என பாராட்டப்படும் 'காந்தாரா' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 24ம் தேதி முதல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கத்தை அதிர வைத்த ரசிகர்கள் இனி இப்படத்தை ஓடிடி மூலம் கண்டுரசிக்கலாம்.  


 


பொன்னியின் செல்வன் வசூலை வீழ்த்திய காந்தாரா  :


உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள காந்தாரா திரைப்படம் ஹிந்தியில் 75 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியான 'பொன்னியின் செல்வன்' வெளியான அதே நாளில் தான் 'காந்தாரா' திரைப்படம் கன்னட மொழியில் மட்டும் வெளியானது. ஹிந்தி மொழியில் பொன்னியின் செல்வன் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அதன் எதிரொலியாக ஹிந்தியில் மணிரத்தினத்தின் படம் குறைந்த வசூலையே ஈட்டியது. ஆனால், அதற்கு பிறகு ஹிந்தியில் வெளியான காந்தாரா, பொன்னியின் செல்வன் வசூலை வீழ்த்தி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.