பலர் வருவார், பலர் போவார்.. ஆனால் சிலர் மட்டுமே எந்நாளும் இருப்பார் என்பதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய உதாரண மனிதர்கள்தான் உண்டு.  அப்படி காலத்தை வென்ற மகா மனிதர்களில் ஒருவர்தான் கண்ணதாசன். 


கவியரசு, அரசவைக்கவிஞர் என்பதில் தொடங்கி, எத்தனையோ பட்டங்களும் புகழ்மாலைகளும் அவரைச் சூழ்ந்தாலும், கண்ணதாசன் என்றழைக்கப்படுவதையே அவர் மிகவும் விரும்பினார்.
இதே நாள், கடந்த 1927-ம் ஆண்டு காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல் பட்டியில்  பிறந்தவர் கண்ணதாசன். அப்பா, அம்மா சூட்டிய பெயர் முத்தையா. 8-வது குழந்தையாத பிறந்த  கண்ணதாசனுக்கு, உடன்பிறந்தோர் 10 பேர். சிறுவயதில் தத்துக் கொடுக்கப்பட்டு, பிறகு நாராயணன் என்ற பெயருடன் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கம்பரின் செய்யுளும் பாரதியின் பாடலும் கண்ணதாசன் தமிழின் இரு கண்கள் என்றே சொல்லலாம். பத்திரிகை ஆசிரியராக மாறும்போது, அவரே வைத்துக் கொண்ட புனைப்பெயர்தான் கண்ணதாசன். ஆனால், அதுவே சாகாவரம் பெற்ற பெயராக தமிழர்களுக்கு மாறியது. 




இன்றைய உலக வாழ்வியலை , புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி கண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… என்ற பாடல் வரிகள் மூலம் அன்றே சொன்னவர் கவிஞர் கண்ணதாசன். அதேபோன்று, “பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை” என்ற வரிகளும், எந்த காலத்திற்கும் ஏற்றது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஏனெனில், இது  உலக இயல்பு. 
தமிழகத்தின் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான எம்ஜிஆர், கருணாநிதி என இருவருடனும் மிக நெருக்கமாக இருந்தவர் கண்ணதாசன். இருவர் பற்றி நல்லதையும் எழுதியிருக்கிறார். சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது.  அவர் எழுதிய பாடல்களில் ஒன்றான,  ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? கூடுவிட்டு ஆவி போனால், கூடவே வருவது என்ன? என்ற வரிகள், இன்றும் பலருக்கு உரைகல் என்பதில் ஐயமில்லை. 
கண்ணதாசன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.  அதைக்கூட, தாம் எழுதி பாடல் ஒன்றில், “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என பாடிவிட்டு, “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று எழுதியிருந்தார். அது சத்தியம்,சத்தியம், 100 சதவீதம் சத்தியம் என்றே சொல்லலாம். 
காதல் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு,  நூற்றுக்கணக்கான உதாரணங்கள் இருந்தாலும், என்னைப் பொறுத்தமட்டில், “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவர் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை” என காதலியைச் சொல்லும்போது, கரையாத மனதும், உற்சாககுளியல் போடும் என்றால் மிகையில்லை. 
ஆளுமைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, “மாபெரும் சபையினில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்”  என அவர் எழுதியதை, எல்லா காலத்திலும் அனைவரும் ஏற்றுக் கூடியதே. 


பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல ரூபங்களில் திரைத்துறையில் கால் பதித்து இருந்தார். தாம் கண்ட வரலாற்று நாயகன் காமராஜர் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற கண்ணதாசனின் ஆசை மட்டும் அவர் காலத்தில் நடக்கவில்லை. 
அதேபோல், சினிமா பாடல்கள், நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம் என தமிழ் மொழியில் கண்ணதாசன் நுழையாத துறையே இல்லை. சினிமா பாடல்கள் மட்டுமல்ல, ஆன்மீகம் தொடர்பாக, கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் இன்றும் அதிகமாக விற்கக்கூடிய புத்தகங்களில் ஒன்று என்பதே, அவருடைய சாகாவரம் படைத்த எழுத்துகளுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம். 
பல்லாயிரக்கணக்கான பாடல்கள், கவிதைகள் என கோலோச்சிய கண்ணதாசன், முல்லை,  தென்றல்திரை, திருமகள், சண்டமாருதம் என பல இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன்,தாம் எழுதிய சேரமான் காதலி என்ற நாவலுக்காக, சாகித்ய அகாதெமி விருதையும் பெற்றுள்ளார், அவருக்கு தமிழக அரசு சார்பில், மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
1981-ம் ஆண்டு உடல்நலக்குறைவால், சிகிச்சைப் பலனின்றி அமெரிக்காவில் மறைந்த கண்ணதாசனுக்கு, தமிழகத்தில் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. அவர் கடைசியாக எழுதிய பாடல், கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்தான். அந்தப் பாடலில் வரும் வரிகள் போல, “உனக்கு உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே” என, அவரை தமிழும் தமிழர்களும் மறக்கவே மாட்டார்கள். அழியாப்புகழுடன்  சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் என்பதே  சரி. 
வாழ்வின் அனைத்து வகை உணர்வுகளையும் தம் எழுத்துகளால், நம் மனதிற்குள் ஊடுருருவி, அதை ஆற்றுப்படுத்தி, நம்மை புது மனிதனாக உருவாக்கும் சக்தி கொண்டவர் கண்ணதாசன். அதை, அவர்காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழ் உள்ளவரை அனைவரும் ஏற்பார்கள் என்பது அக்மார்க் உண்மை.