தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் கங்குவா. இந்த படம் கடந்த 14ம் தேதி உலகெங்கும் வெளியாகியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தில் அதிக சத்தம் இருப்பதாக விமர்சித்தனர்.
முதல் அரைமணி நேரம் சத்தம்:
இந்த நிலையில், கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் "சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு ரசிகையாக குறிப்பிடுகிறேன். கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் கண்டிப்பாக அந்த சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. 3 மணி நேர படத்தில் அது வெறும் முதல் அரைமணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், கண்டிப்பாக கங்குவா ஒரு சிறந்த அனுபவம். இதுபோன்ற ஒரு ஒளிப்பதிவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது.
சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே எதிர்மறை விமர்சனம் வந்தது. முதல்நாளிலே இவ்வளவு விமர்சனத்தை பரப்பியது வேதனை அளிக்கிறது. பல குழுக்களாக இணைந்து கங்குவா படததிற்கு எதிராக விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது.
பாராட்டிற்கு தகுந்தவர்கள்:
கங்குவாவின் நேர்மறையான விஷயங்கள் இல்லையா? பெண்களின் ஆக்ஷன் காட்சிகள். இளைஞரின் காதல், கங்குவாவிற்கு நிகழ்ந்த துரோகம்? விமர்சனத்தின்போது இதுபோன்ற நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். கங்குவா படத்தின் கதைக்காகவும், அவர்களின் முயற்சிக்காகவும் 3டியில் அற்புதமான காட்சிகளை காட்டியதற்காகவும் அவர்கள் பாராட்டிற்கு தகுந்தவர்கள். கங்குவா அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கங்குவா படம் குறித்து ஜோதிகா தற்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தின் சூர்யாவுடன் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் திஷா பதானி நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துள்ள இந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் சத்தம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவே படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திரையரங்கில் படத்தின் சத்தம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.