வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம்
சூர்யா
நடிகர் சூர்யா தற்போது பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள் வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி, நடிகர் பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கற்பனையான சரித்திர கதையாக உருவாகி வரும் கங்குவா படத்தை சூர்யா ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபோஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் சூர்யா இப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளது தெரியவந்தது ரசிகர்களை உற்சாகப் படுத்தியது
புறநானூறு
கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படம் புறநானூறு. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காராவுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் சூர்யா. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். 1900 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இது அவரது 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ணா
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் கர்ணா. எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி வருகிறார். சரித்திர கதையை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புறநானூறு படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து சூர்யா இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக இருந்த இந்தப் படம் சில வருடங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கப் போகும் படம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் சுதா கொங்காராவுடனான படத்தைத் தொடர்ந்து சூர்யா இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.