சிறுத்தை சிவா அஜித் கூட்டணி


வீரம் , வேதாளம் , விவேகம் விஸ்வாசம் என இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் கூட்டணியில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றன. வேதாளம் , விவேகம் ஆகிய இரு படங்கள் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் மற்ற ரசிகர்களுக்கு ட்ரோல் மெட்டிரியலாக மாறின. செண்டிமெண்ட் காரணமா தெரியவில்லை எல்லா படங்களும் 'வி 'யில் தொடங்கி 'ம்' இல் முடியும் படங்கள். இதில் ரசிகர்களின் பொறுமையை அதிகபட்சமாக சோதித்த படம் என்றால் விவேகம் படம். கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஒரே இயக்குநர் நடிகர் கூட்டணியில் தொடர்ச்சியாக படங்கள் வெளியானதால் ரசிகர்களிடையே ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். கொஞ்ச வருடத்திற்கு சிவா மற்றும் அஜித் இணையாமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் தெரிவித்தார்கள். தற்போது ஐந்தாவது முறையாக அஜித் சிவா கூட்டணி இணைய இருப்பதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.


ஐந்தாவது முறையாக இணையும் அஜித் சிவா கூட்டணி


சிருத்தை சிவா தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியிருக்கிறது. இப்படத்தை மொத்தம் எட்டு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. குறைந்தது மூன்று மொழிகளில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சூர்யா மட்டும் இல்லாமல் சிறுத்தை சிவாவின் கரியரில் இது ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சிவாவிடம் கங்குவா படத்திற்கு பிறகு அஜித் உடன் படம் எதிர்பார்க்கலாமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவா " கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். ஆனால் அதை நான் சொன்னால் நல்லா இருக்காது அஜித் சார் சொன்னால் தான் நல்லா இருக்கும்' என தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமளித்தாலும் மற்ற தரப்பு ரசிகர்களுக்கு இன்னொரு படமா என்று பீதியை கிளப்பியுள்ளது.