மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு குறித்து மாநிலங்கவையில் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
மாதவிடாய் சமயத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வலி என்பது வெவ்வேறு மாதிரி இருக்கும். அதற்கு விடுப்பு அவசியமா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும். மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு இல்லை எனவே அதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை என்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன.
கங்கனா ரனாவத் ஆதரவு :
ஆனால் ஸ்மிருதி இரானியின் கருத்திற்கு தனது ஆதரவை சோசியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். "வேலைக்கு செல்லும் பெண் என குறிப்பிடுவதே முதலில் கட்டுக்கதை. மனிதகுலத்தின் வரலாற்றிலேயே வேலை செய்யாத பெண் என யாருமே இல்லை. விவசாய பணிகளில் ஈடுபடுவதில் இருந்து வீட்டு வேலை, குழந்தைகளை பராமரித்தல் வரை பெண்கள் என்றுமே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர் செய்யும் அர்பணிப்புக்கு எதுவும் தடையாக இருந்ததே இல்லை. மருத்துவ அவசியம் ஏற்பட்டால் தவிர மாதவிடாய் காலத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு தேவையில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் மாதவிடாய் என்பது நோய் அல்லது குறைபாடு கிடையாது" என போஸ்ட் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இது போல சமுதாயம் சார்ந்த பல விஷயங்களுக்கு மிகவும் துணிச்சலாக தனது கருத்தினை முன் வைக்க கூடியவர் நடிகை கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2 :
திரையுலகை பொறுத்தவரை தமிழில் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் 'சந்திரமுகி 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. இப்படத்தில் கங்கனாவின் அபாரமான நடிப்பு பாராட்டை பெற்றது.
'எமர்ஜென்சி' ஒத்திவைப்பு :
மேலும் முதல் முறையாக நடிகை கங்கனா ரனாவத் இயக்குநராக அறிமுகமாகும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் வெளியீடு 2024ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் கேரக்டரில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத். நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் மீண்டும் அப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.
ரித்தேஷ் ஷாவின் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் அனுபம் கெர், மிலிந்த் சோமன், மஹிமா சவுத்ரி, மறைந்த சதீஷ் கௌஷிக் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.