தமிழில் முன்னணி தொலைக்காட்சியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரை இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல வெப்சீரிசாக எடுத்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 


கனா காணும் காலங்கள் சீசன் 3 எப்போது ரிலீஸ்?


முதல் இரண்டு சீசன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாவது சீசன் உருவாகி வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில், மூன்றாவது சீசன் எப்போது ரிலீஸ்? என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனா காணும் காலங்கள் தொடரின் மூன்றாவது சீசன் வரும் ஆகஸ்ட் 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற  'நியூ ஏஜ் நியூ பேட்ச்' எனும் அட்டகாசமான பாடலுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். 


பள்ளி வாழ்க்கை:


பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள், சந்தோஷம் என அவர்களது பள்ளிப் பருவத்தை கலவையான உணர்வுகளுன் எடுத்ததால் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, டிஸ்னி ஹாட்ஸ்டார் இதைத் தொடராக கடந்த 2022  முதல் சீசனை வெளியிட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரல் 21ம் தேதி இரண்டாவது சீசனை வெளியிட்டது.


இரண்டு சீசன்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் வெளியாக உள்ளது. கனா காணும் காலங்கள் வெப்சீரிஸின் முதல் சீசனில் 132 எபிசோட்களும், இரண்டாவது சீசனில் 112 எபிசோட்களும் ஒளிபரப்பாகியது. மூன்றாவது சீசனில் தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாச்சலம், ஆஷிக் கோபிநாத், பரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


கனா காணும் காலங்கள் சீசன் 3-ஐ ரமேஷ் பாரதி, ஜஸ்வினி, சிவா அரவிந்த், மனோஜ் மற்றும் சிதம்பரம் மணிவண்ணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.  இதற்கான கதையை சிவகாந்த் எழுதியுள்ளார்.