மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசியுள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ்
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹிர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குணா படத்தை ரெஃபரன்ஸாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.
கமல்ஹாசன் பாராட்டு
கமல்ஹாசனின் குணா படத்திற்கு கண்மணி அன்போடு பாடலுக்கு ஒரு புகழாரமாக அமைந்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படம். 30 வருடத்திற்கு மேல் குணா படம் மீண்டும் மக்களால் நினைவுகூரப்படுவதற்கு மஞ்சும்மல் பாய்ஸ் படம் காரணமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்கள் முன்பு இப்படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து படம் குறித்த தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கண்மணி அன்போடு பாடல் வந்த போது தான் சிலிர்த்து போனதாக அவர் இயக்குநர் சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது குணா படத்தை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் சந்தான பாரதி படம் குறித்து பேசியுள்ளார்.
அந்த குகை அவ்வளவு ஆபத்தானதுனு தெரியாது
குணா படத்தை வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி இருப்பதாக கேள்விபட்டு தான் இப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு படம் ரொம்ப பிடித்திருந்ததாகவும் சந்தான பாரதி தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தைப் பார்த்தபின் குணா குகையில் இவ்வளவு ஆபத்துகள் நிறைந்திருப்பதை தான் தெரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். குணா படத்தை எடுக்க அந்த குகைக்கு சென்றபோது அதில் இவ்வளவு ஆபத்து இருப்பது யாருக்கும் தெரியாது. இந்தப் படத்தைப் பார்க்கும்போது உண்மையில் தாங்கள் பெரிய ஒரு ரிஸ்க் எடுத்திருப்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கமல் கண்கலங்கிட்டார்
இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தபோது கண்மணி அன்போடு பாடலுக்கு திரையரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்பரித்ததாக சந்தான பாரதி கூறியுள்ளார். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்து தனது புல்லரித்துப் போனதாகவும் தான் கண்கலங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் படம் பார்த்த கமல்ஹாசனுன் கண்கள் கலங்கி அமர்ந்திருந்ததாக சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.