தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மலையாள இயக்குநர் பரதன் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேவர் மகன்'.  மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு சமூகத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதைக்களத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, தலைவாசல் விஜய், வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். விமர்சனங்கள் அதற்கான விளக்கங்கள் என  இப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



இசைஞானி இளையராஜாவின் இசையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படம் 1992ம் ஆண்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படம் என்ற பிரிவின் கீழ் தேசிய விருதை கைப்பற்றியது. மேலும் 65-வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு படம் என பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய தேவராக நடிகர் சிவாஜி கணேசனின் மகன் கமல்ஹாசன் அந்த ஊரில் தன்னைச் சுற்றி நடக்கும் எந்த விஷயமும் பிடிக்காத காரணத்தால் ஊரை விட்டுச்சென்று பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்படி அந்த கிராமத்துக்கே முக்கியமானவராக ஆகிறார் என்பதுதான் தேவர் மகன் படத்தின் கதைக்களம். 


புதுமையை கையாள்வதில் உலகநாயகனை மிஞ்ச யாருமே இல்லை. அப்படி தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை அறிமுகப்படுத்தும் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தை புதிய சாப்ட்வேர் ஒன்றை பயன்படுத்தி தான் இந்த திரைக்கதையை எழுதினார். ஒரு வாரத்தில் எழுதி முடிக்கப்பட்ட கதை என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையை அவர் எழுதிய விதத்திலேயே ஒரு யுக்தியை கையாண்டு இருப்பார்.


 சாதி வெறி பிடித்து அலையாமல் பிள்ளைகளுக்கு படிப்பறிவை கொடுக்க வேண்டும் என்ற கருத்து இப்படத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது.



சக்திவேல் - பானு இடையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்கள், பெரிய தேவரின் உறுதி, பஞ்சவர்ணத்தின் அப்பாவித்தனம், நாசரின் கொடூர சாதி வெறி, வன்மம் என ஒவ்வொருவரின் பங்களிப்பும், நடிப்பைத் தாண்டியும் சாதாரண மனிதர்களாகவே அவர்கள் தெரிந்தார்கள்.


படத்தை வசனங்கள் எந்த அளவுக்கு தூக்கி நிறுத்தியதோ அதே அளவுக்கு பார்வையாளர்களின் மனதோடு உறவாடியது இளையராஜாவின் இசை. 31 ஆண்டுகளைக் கண்டதும் இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருவதுதான் தேவர் மகன் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். 


நடிகர் திலகமும் - உலகநாயகனும் ஒன்று சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என மிகுந்த ஏக்கத்தில் இருந்த திரை ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமைந்தது. இந்த இரு ஜாம்பவான்களின் நடிப்புக்கு தீனி போட்ட தேவர் மகன் படம் தொடர்ந்து விவாதிக்கப்படும்.