நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த நடிகர் நாகேஷ் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்று. நகைச்சுவை, கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமின்றி வித்தியாசமான ஒரு வில்லனாகவும் தன்னை நிரூபித்து காட்டியவர் நடிகர் நாகேஷ்.
கடைசி படம் :
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நாகேஷ் காம்போ எந்த அளவிற்கு வெற்றி பெற்றதோ அதே போல ரஜினி, கமல், அஜித், விஜய், மாதவன் போன்ற இளம் நடிகர்களுடன் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இருப்பினும் கமல்ஹாசன் - நாகேஷ் காம்போ கொஞ்சம் ஸ்பெஷல். அவர்கள் இருவரின் இடையில் இருந்த கெமிஸ்ட்ரியே அதற்கு முக்கியமான காரணமாகும். கமலின் பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் நாகேஷ் அவசியம் இருப்பார். நாகேஷ் கடைசியாக நடித்தது கூட நடிகர் கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படத்தில் தான்.
நக்கலான வில்லன் :
சிரிக்க வைத்தவரை வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்து முதன்மை வில்லனாக 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட் காம்போவில் அமைந்தது அபூர்வ சகோதரர்கள், பஞ்ச தந்திரம், நம்மவர், மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் திரைப்படங்கள்.
பிணமாகவும் நடித்த நாகேஷ் :
கமல்ஹாசன், ரேவதி, ஊர்வசி, ரோகினி நடிப்பில் வெளியான கலக்கலான நகைச்சவை திரைப்படத்தில் ஒரு பிணம் கதாபத்திரத்தில் வசனமின்றி தத்ரூபமான நடிப்பால் மட்டுமே அசத்தியிருந்தார் நாகேஷ். அந்த மாமனிதனின் 14 வது நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் நாகேஷ் மீது உலகநாயகனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இந்த பதிவின் மூலம் வெளிப்படுகிறது.
"மகா கலைஞர் நாகேஷின் நினைவு நாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலை பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்".