தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இந்தியன் 2 திரைப்படம் மூலம் இணைந்துள்ளது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு.




2019ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சில பல பிரச்சனைகளால் பாதியிலேயே  முடங்கிப்போனது. அதனை தொடர்ந்து பட்ஜெட் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக  படப்பிடிப்பு தொடரமுடியாமல் நின்றுபோனது. அதற்கு பிறகு 'விக்ரம்' திரைப்படத்தில் கமல் பிஸியானதால் இந்தியன் 2 படப்பிடிப்பு ஒத்திவைக்க பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.







ஹெலிகாப்டரில் கமல் :

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 ஷூட்டிங் முழுவீச்சில் திருப்பதி அருகே உள்ள  கந்திகோட்டா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வந்த இறங்கியுள்ளார். அவர் திருப்பதியில்  இருந்து  கந்திகோட்டா வரை தினமும் சிறப்பு ஹெலிகாப்டரில் தான் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து இறங்கும் புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறன்றன. அங்கு கிராமம் போன்ற ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. சேனாதிபதியாக கமல் நடிக்கும் இளமை கால காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன எனும் தகவல் வெளியாகியுள்ளது. 







ரிலீஸ் எப்போ ?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த ஆண்டு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், குரு சோமன்சுந்தரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார் ரவிவர்மன்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் KH234 திரைப்படத்திலும் இணைய உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.