நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துணை டான்ஸ் மாஸ்டர், ஹீரோ, இயக்குநர், பாடலாசியர், டான்ஸ் மாஸ்டர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் வரும் இன்று 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள கமல் உலகநாயகன் என்று திரையுலகிலும், ஆண்டவர் என்று ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு கமலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கமல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை காணலாம்.
- கமல் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை தமிழில் இயக்கியிருந்தாலும் முதல் முதலாக அவர்சாச்சி 420 என்ற இந்தி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் 1997 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்த அவ்வை சண்முகி படத்தின் ரீமேக் ஆகும். இந்திக்காக சில மாற்றங்களை கதையில் கமல் செய்திருப்பார்.
- பொதுவாக பிற மொழிகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என மெனக்கெடுபவர்களில் கமல்ஹாசன் மிக முக்கியமானவர். குறிப்பாக மலையாளத்தில் புகழ் பெற்ற இயக்குநர்களின் கைவண்ணத்தில் தான் நடிக்க வேண்டும் என்பது கமலின் விருப்பமாக இருந்தது.
- கமலின் கதை களத்தை பொறுத்தே அவரது படங்களில் கதாபாத்திர தேர்வும் இருக்கும். அதேபோல் தனது படங்களில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், மேக்கப் ஆர்டிஸ்ட், நடன இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பல வேலைகளை கையாள்வார். அதேபோல் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் சத்யராஜ், மாதவன், விக்ரம், தற்போது உதயநிதி படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.
- தனது படங்களை தவிர்த்து தனுஷ் நடித்த புதுப்பேட்டை, கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் ஆகிய படங்களிலும் கமல் பாடியுள்ளார்.
- எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதில் சிவாஜிக்கான நடன அசைவுகளை எம்ஜிஆருக்கு வைத்து அவரிடம் குறும்புக்காரர் என செல்லமாக திட்டு வாங்கியவர்.
- சினிமா தவிர்த்து சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் ஜெயா டிவியில் சினிமா தொடர்பான பட்டிமன்றமும் நடத்தியுள்ளார்.
- தனது படங்களை இயக்கிய சில இயக்குநர்களை நடிகராகவும் நடிக்க வைத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துவார். ஒரு படத்தில் வில்லனாக நடிப்பவர்களை கமலே அடுத்த படத்தில் காமெடி நடிகராகவும் பயன்படுத்துவார்.ட்
- களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக முதலில் நடிக்கவிருந்தவர் நடிகை டெய்ஸி இரானி. அவர் பிற்காலத்தில் நடிப்புக்காக ஒரு பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் இருந்து குணா நாயகியை கண்டுபிடித்தார்,
- இயக்குநராக வேண்டும் என சினிமாவுக்குள் வந்தவர் நடிகரானது இன்றைக்கும் காமெடி சம்பவம் என கமல் தெரிவிப்பார்.