மாமன்னன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தேவர் மகன் படத்தைக் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மாரி செல்வராஜ் பேசியதை எதிர்த்தும் ஆதரித்தும்  பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


மாரி செல்வராஜ் பேசியதில் எந்தத் தவறும் இல்லை எனவும் தேவர் மகன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சாதியத் திரைப்படம் எனவும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்


மாரி செல்வராஜ் மீது விமர்சனம்


அதே நேரத்தில் மறுபக்கம் மாரி செல்வராஜை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியனுக்கு அப்பாவாக நடித்த தங்கராஜை  மாரி செல்வராஜ் அடித்ததாக அவர் கூறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு மாரி செல்வராஜை விமர்சித்து வருகிறார்கள் குறிப்பிட்ட சிலர்.


 நீண்டு கொண்டு போகும் விவாதம்


இருவேறு தரப்புகளில் இருந்தும்  முடிவடையாத விவாதம் சென்றுகொண்டிருக்கு நிலையில் தேவர் மகன் படம் குறித்து கமல் பேசிய பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த காணொளியில் தேவர் மகன் படம் குறித்து  கமல் அளித்திருக்கும் பதில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கே சொன்ன  பதிலாக அமைந்திருக்கிறது.


கமலின் பதில் என்ன


தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் தேவர் மகன் திரைப்பத்தில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பொண்ணே பாடல் தென் மாவட்டங்களில் தலித் மக்களுக்கு நிகழ்த்திய வன்முறைகளைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு கமல் அளித்த பதில் இதுதான்...






மன்னிப்புக் கேட்ட கமல்


“அந்த விபத்திற்கு நானும் இளையராஜாவும்  மன்னிப்பு கேட்கவேண்டும் . அந்தப் பாடலை உருவாக்கியபோது  நாங்கள் அதைபற்றி நினைக்கவில்லை. எங்கள் மனதில் அது இல்லை. ஒரு வியாபார யுக்தியாகவோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வாழ்த்திப் பாடவேண்டும் என்கிற எண்ணத்தில் நாங்கள் அதை செய்யவில்லை. தேவர் மகன் படத்திற்கு முன் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் கதாநாயகனை போற்றும் வகையிலான  “எங்க ரத்னம் தங்க ரத்னம் “ என்கிற வகையிலானப் பாடல்கள் வந்திருக்கின்றன. அந்தப் பின்னணியில் எடுக்கப்பட்டது தானே தவிர இதற்கு பின் வேறு எந்த சூட்சமமும் கிடையாது. ஏற்கனவே இதற்காக நாங்கள் பல முறை மன்னிப்புக் கேட்டிருக்கிறோம். இப்போது மறுபடியும் தேவர் மகன் என்று படம் எடுத்தால் நான் அதற்கு தேவர் மகன் என்று பெயர் வைக்கமாட்டேன் ஆனால் அந்தக் காலத்திற்கு அது தேவைப்பட்டது. உதாரணத்திற்கு மது ஒழிப்பைப் பற்றி ஒரு படம் எடுக்கும்போது ஒரு கதாநாயகன் குடிகாரனாக இருப்பது மிக அத்தியாவசியம். அவன் எப்படி அதிலிருந்து வெளியே வந்து கதாநாயகனாக மாறுகிறான் என்னும்போது தான் அதன் அழுத்தமாக இருக்கும்.” என்று பதில் கொடுத்துள்ளார்.


மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் தன் சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை நியாயமாக வெளிப் படுத்தியதற்காக அவர் விமர்சிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனது தவறை ஏற்றுக்கொண்டு கமல் மன்னிப்புக் கேட்கும் இந்த காணொளி மாரியின் நியாயத்தைப் புரிந்துகொள்ள உதவலாம்.