தக் லைஃப் 

38 ஆண்டுகளுக்குப் பின் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் . சிம்பு , த்ரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் , நாஸர் , சஞ்சனா , உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது தக் லைஃப். இப்படத்தின் டிரைலர் முதல் பாடல்கள் வரை பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழ் , இந்தி , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்க்கலாம்.

ஹரிஹர வீர மல்லு

ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக பவன் கல்யாண் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார். ஓ.ஜி . பகத் சிங் , ஹரிஹர வீர மல்லு. இதில் ஹரிஹர வீர மல்லு படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு வரும் மே 12  ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பாபி தியோல் மற்றும் நிதி அகர்வால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களிடம் இருந்து கோஹினூர் வைரத்தை திருப்பி எடுத்துவர முயற்சி செய்த நபரின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51 ஆவது படமாக உருவாகியுள்ளது குபேரா.  நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 20 ஆம் தேதி தமிழ் , இந்தி , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் குபேரா படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்தது.

கண்ணப்பா

தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயத்தில் உருவாகியுள்ள படம் “கண்ணப்பா”. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், பிரம்மானந்தம், மோகன் பாபு, ஐஸ்வர்யா, முகேஷ் ரிஷி, சுரேகா வாணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், அக்‌ஷய்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என முன்னணி பிரபலங்களும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில் படம் அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஜூன் 27 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.