இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமலஹாசன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்' . ஏற்கனவே இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான 'நாயகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 'தக் லைஃப்'  திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது.

Continues below advertisement

கடந்தாண்டு ரிலீஸ் ஆன 'இந்தியன் 2'  திரைப்படம் கமல் ரசிகர்களை ஏமாற்றினாலும், கண்டிப்பாக 'தக் லைஃப்' திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதலே கலவையான விமர்சனங்களை மட்டுமே  'தக் லைஃப்' பெற்றுவருகிறது. கமல்ஹாசனை விட, சிம்புவின் நடிப்பு தான் அதிகம் கவனம் பெற்றுள்ளதாகவும், சண்டை காட்சிகள், BGM, பாடல்களை தவிர்த்து திரைக்கதையில் பல மைனஸ் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மற்றொரு தரப்பினர் 'நாயகன்' படம் போல் எதிர்பார்த்ததாகவும் ஆனால் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள 'தக் லைஃப்'  , செக்க சிவந்த வானம் படத்தின் 2-ஆம் பாகம் போல் உள்ளதாக கூறி வருகிறார்கள். 

Continues below advertisement

'தக் லைஃப்'  திரைப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில்,  உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அரசு அனுமதி உடன் இன்று காலை முதல் ஷோ 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதனை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவும் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, ஜோ ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  ஐந்து மொழிகளில் 'தக் லைஃப்' திரைப்படத்தை திட்டமிடப்பட்ட நிலையில், கர்நாடகாவில் மட்டும் தற்போது சட்ட சிக்கல் காரணமாக வெளியாகவில்லை.

அதாவது கமல் 'தக் லைஃப்'  படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், கன்னட ரசிகர்கள் கமல் மன்னிப்பு கேட்கும் வரை 'தக் லைஃப்'  படத்தை கர்நாடகாவில்  திரையிட முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர். கமல்ஹாசன் தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறே செய்யாமல் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். 

தடையை நீக்க கமல் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில்... இது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின்னரே, கர்நாடகாவில் 'தக் லைஃப்'  ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க... இன்று ரிலீஸ் ஆன 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி முன் பதிவில் மட்டுமே 'தக்க லைஃப்' திரைப்படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது . அதேபோல் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் 'தக் லைஃப்' 45 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் முதல் நாளில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் 'தக்க லைஃப்'  திரைப்படம் வசூல் செய்து கெத்து காட்டும் என்பதே திரை வல்லுநர்கள் கணிப்பாக உள்ளது.