ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து வெளியாக இருந்த இந்தியன் 3 படத்தின் பணிகள் முடிக்கபடாததால் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தியன் 3 படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளது. 2027 பொங்கலுக்கு இந்தியன் 3 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் கமல் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. இப்படத்தின் சேனாபதி கதாபாத்திரம் இன்றளவும் கமல் நடித்த மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இப்படத்தின் அடுத்த பாகமாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சுமார் ரூ300 கோடி பட்ஜெட்டில் இந்தியன் 2 மற்றும் 3 ஆவது பாகம் படமாக்கப்பட்டது. ரசிகர்களை திருப்திபடுத்தாத நிலையில் இந்தியன் 2 திரைப்படம் மொத்தமே உலகளவில் ரூ150 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
கிடப்பில் கிடந்த இந்தியன் 3
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே இந்தியன் 3 படமும் வெளியாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்தியன்3 படத்தின் எஞ்சியிருந்த படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஷங்கர் இடையில் சம்பள குறித்து பேச்சுவார்த்தை சமாதானத்தை எட்டாத நிலையில் இந்தியன் 3 படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. பலர் இப்படம் வெளியாகாது என நம்பிய நிலையில் தற்போது இந்தியன் 3 ரிலீஸ் அப்டேட் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்
கடைசி நம்பிக்கை
இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய இரு பாகங்களும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டன. இதில் சேனாபதியின் கடந்த கால காட்சிகள் 3 ஆம் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனின் பேசிய கமல் தனக்கு இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகமே ரொம்ப பிடித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இந்தியன் 3 படத்தின் மீது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பெரிய நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது. இதனால் இப்படத்தை 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு தீவிரமாக முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
