இந்திய திரையுலகின் சகலகலா வல்லவர் என்று பெயரெடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் விக்ரம். சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசனும் படக்குழுவினரும் தீவிரப்படுத்தினர்.
இதன்காரணமாக, அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வரும் 3-ந் தேதி (நாளை மறுநாள்) மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சம்பள விவரம் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் நாயகனும், அதன் தயாரிப்பாளருமான கமல்ஹாசனுக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் ஆகும். கமல்ஹாசன் தன்னுடைய கேரியரில் ஒரு படத்திற்கு வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு ரூபாய் 10 கோடியும், மலையாள நடிகர் பஹத்பாசிலுக்கு ரூபாய் 4 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரூபாய் 8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூபாய் 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூபாய் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே ரூபாய் 200 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால், நிச்சயம் திரைப்படம் ரூபாய் 500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றால் ரூபாய் 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அவரது நிறுவனம் வெளியிட உள்ள விக்ரம் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் அரசியல் வசனமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்