உலக நாயகன் கமல்ஹாசன் சகலகலா வல்லவன் தான். அதை அவ்வப்போது அவரே நிரூபிப்பார். அப்படி தனக்கு நடிக்க மட்டுமல்ல வகுப்பெடுக்கவும் வரும் என்று நிரூபித்துள்ளார் கமல்ஹாசன். இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்கி என்ற விக்னேஷ் சிவனுக்கு அவர் வகுப்பெடுக்க அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.


சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த செஸ் ஒலிம்பியாடை தமிழக அரசு ஏற்று நடத்தி வருகிறது. இதற்கு தம்பி என்ற குதிரை முகம் கொண்ட மனித வடிவு லோகோவாக உருவாக்கப்பட்டுள்ளது. தம்பி வேட்டி சட்டையில் ஜொலிக்கும் பொம்மைகளும், போஸ்டர்களும் நகர் முழுவதும் இருக்கின்றன. செஸ் ஒலிம்பியாடை பிரபலப்படுத்த சென்னை நேப்பியர் பாலமே செஸ் போர்டு போல் கருப்பு வெள்ளை சதுர கட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்பு இடம் பெற்றது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்பார்வை செய்தார்.


இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில், கலை நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் நடந்த உரையாடல் வீடியோவை பகிர்ந்துள்ளார். 


அந்த பதிவில் "உலக நாயகன் கமல்ஹாசனுடன் நான் செலவழித்த சில மணி நேரங்கள் அவரது அருள் எனக்கு கிடைத்தது. அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் சேர்த்த நுணுக்கங்கள்.. அவருடனான இந்த குறிப்பிட்ட உரையாடல் என்னால் மறக்க முடியாதது" என குறிப்பிட்டுள்ளார். 






அந்த வீடியோவில் "ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, மாடுபிடி என்பதில் கூட காளை அடக்குதல் என்று நாம் சொல்லுவதில்லை. ஏனென்றால் அடுத்த நாள் அந்த மாட்டை விவசாயத்திற்கு கொண்டு போய்விடுவார்கள்" என்று விக்னேஷ் சிவனிடம் கமல் விளக்கமளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.