தக் லைஃப்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் . நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. முன்னதாக இப்படத்தில் ஜெயம் ரவி , துல்கர் சல்மான் ஆகியவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது . ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் இந்தப் படத்தில் இருந்து இருவரும் விலகினர். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் சிம்புவும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அசோக் செல்வனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டார்கள். இவர்கள் தவிர்த்து இப்படத்தில் த்ரிஷா , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.


சென்னையில் துவங்கிய தக் லைஃப் படப்பிடிப்பு






தக் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது . முதல் கட்டமாக சைபீரியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சென்னை மற்றும் டெல்லியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.  இதன் தொடக்கமாக சென்னையில் தக் லைஃப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 17 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரின் காட்சிகள் படமாக்கப் பட இருக்கின்றன. இந்த ஆண்டிற்குள் இப்படத்தை திரையரங்கில் வெளிட படக்குழு திட்டமிட்டுள்ளதால்  படப்பிடிப்பை துரிதப் படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைத் தொடர்ந்து அடுத்து டெல்லிக்கு செல்ல இருக்கிறது படக்குழு.


இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது .லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால்  , ரகுல் ப்ரீத் , பிரியா பவானி சங்கர் , எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா , சித்தார்த் , மறைந்த நடிகர்கள் மயில்சாமி , மனோபாலா , மாரிமுத்து , விவேக் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.