இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன் தான் எப்படி நடிகனாக மாறினேன் என்பது குறித்து பேசிய பகிர்வை இங்கு பார்க்கலாம்.
இந்த விஷயம் குறித்து கமல்ஹாசன் பேசும் போது ‘நான் சினிமாத்துறைக்குள் நடிப்பதற்கு வரவில்லை. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் டப்பிங் முடிந்த சமயம் அது. என்னைப்பற்றி இயக்குநர் பாலசந்தர் பெருமையாக பேசி இருக்கிறார். அது எனக்கு தெரியாது. பொதுவாக அவர் என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். அதனால் நமக்கு நடிப்பு வேண்டாம். தொழில் நுட்ப கலைஞராகவே போய்விடலாம் என்றுதான் நினைத்தேன்.
டப்பிங் முடிந்த உடன் பாலசந்தர் என்னை தனியாக அழைத்துக்கொண்டு போய், வாழ்கையில் என்ன திட்டம் வைத்திருக்கிறாய் என்று கேட்டார். நான் உடனே யோசித்து சொல்கிறேன் என்றேன். உடனே, என்ன இப்படி சொல்கிறாய் என்றார்.. உடனே நான், உங்களைப்போல் ஒரு இயக்குநர் ஆக வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் போடா பைத்தியக்காரா.. என்றார்.
மேலும் அவர், நீ ஒரு நல்ல தொழில் நுட்ப கலைஞன். துணை இயக்குநராக இருந்திருக்கிறாய், நல்ல நடனம் ஆடுகிறாய்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நான் உனக்கு வைத்திருக்கும் திட்டம் அவ்வளவு எளிதாக வாய்க்காது. நீ நடிகனாக வேண்டும் என்றார்.
ஆட்டோ ரிக்ஷாவிலேயே ஸ்டியோவிற்கு வர ஆசைப்படாதே. நன்றாக சம்பாதித்து வீடு கட்டு.. கார் வாங்கு.. என்றார். வாழ்வு கொடுத்தவரே சொல்லிவிட்டார். அதனால் தான் நான் நடிக்க வந்தேன். அவர் சொன்னது போலவே வீடு கட்டிவிட்டுதான் டைரக்ஷன் செய்தேன்.” என்று பேசி இருக்கிறார்.
நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், 1954-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தார் கமல் ஹாசன். இவரது இயற்பெயர் பார்த்தசாரதி. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், நளினி. தொடக்கக் கல்வியை பரமக்குடியில் முடித்த கமல்ஹாசன், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் 1967-ம் ஆண்டு, சென்னை புரசைவாக்கத்திலுள்ள சர் எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார்.
திரைவாழ்க்கை
நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.
1960-ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சித்திரமாக இவர் அறிமுகமானார். அப்போது தொடங்கிய இவரது திரைப்பயணம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார்.
இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். மகாநதி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
2018-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரரைச் சந்தித்து ஆசி பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.