INDIAN 2: கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற,  இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.


இந்தியன் 2:


கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைத்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த் மறைந்த நடிகர்களான விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படம், அவருக்கு கம்பேக் ஆக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


5 ஆண்டுகளாக உருவான திரைப்படம்:


இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டே தொடங்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமானதால், ஒரு கட்டத்தில் படம் முற்றிலும் கைவிடப்படும் சூழல் உருவானது. அப்போது கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான, விக்ரம் படம் வெளியாக வசூலில் சக்கை போடு போட்டது. அப்படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. மடமடவென வளர தொடங்கிய படம், எண்ணியதை விட நீளமானதாக உருவானது. இதையடுத்து அந்த படத்தை இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது பாகம் இன்று வெளியாகும் நிலையில், படத்தின் முடிவிலேயே மூன்றாம் பாகத்திற்கான டிரெய்லரும் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே படம் முடிந்த உடனேயே வெளியே வராமல், சற்று காத்திருங்கள். 


இந்தியன் 2 எதிர்பார்ப்புகளும், கேள்விகளும்:



  • முதல் பாகத்தில் வெளியான திரைப்படம் தமிழ்நாட்டை மட்டுமே கதைக்களமாக கொண்டிருந்தது. ஆனால், இந்தியன் 2 தேசிய அளவில் பயணிக்கு என எதிர்பார்க்கப்படுகிறது

  • முதல் பாகத்தை காட்டிலும் இது அதிக ஆக்‌ஷன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு படமாக்கப்பட்டுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது

  • முதல் பாகத்தில் கமல் இரட்டை வேடங்களில் வருவார். ஆனால், இதில் எதிரிகளை பந்தாடுவதற்காக 5-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் காட்சியளிக்கிறார்

  • 100 வயதை கடந்த தாத்தா சட்டையே இல்லாமல் சண்டையிடுவதை போன்று டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ஊழலை எதிர்க்கும் கதைக்களத்தை எப்படி மூன்றாம் பாகம் வரை, சலிப்பு ஏதுமின்றி இயக்குனர் ஷங்கர் நகத்தப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் இந்தியன் 2 படமே சுமார் 3 மணி நேரம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 1996ல் வெளியான இந்தியன் திரைப்படத்தில் சேனாதிபதி கதாபாத்திரம் 70+ வயதை கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது வெளியாக உள்ள கதாபாத்திரத்திற்கு வயது 100-ஐ கடந்திருக்கும். அதை எப்படி நம்பும்படியாக சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.