உடல்நலக்குறைவால் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்தப்படத்தில் மணிரத்னத்துடன் இணையவுள்ளதாக கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கமல் பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வுகள் என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார்.






அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில் பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்திருந்தார். இதன் புகைப்படத்தை நேற்று அவர் தனது சமூக வலைத்தப்பக்கத்திலும் கமல் பகிர்ந்திருந்தார். இதற்கிடையில் நேற்று மதியம் சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கமல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. 






மேலும் சிகிச்சை முடிந்த பிறகு இன்று கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல் லேசான காய்ச்சல், சளி, இருமல்  போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.