நடிகர் கமல்ஹாசன் நெகட்டிவ் ரோலில் நடிக்க, பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கும் கல்கி 2898AD படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தை மையப்படுத்தி மிகப்பெரும் பட்ஜெட் செலவில் கிருஷ்ணரின் கல்கி அவதாரத்தை சுற்றிய அறிவியல் புனைவாக உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி 2898AD. பான் இந்திய திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், நடிகைகள் தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர்.
வில்லனாக கேமியோ ரோல்!
இவர்களைத் தாண்டி, பல ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பு, உள்ள அவரது மொழி தாண்டிய பான் இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
நாக் அஸ்வின் இப்படத்தினை இயக்கும் நிலையில், ரூ.600 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில், இந்த கௌரவக் கதாபாத்திரத்துக்காக மட்டும் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மறைக்கப்படும் கமல்ஹாசனின் தோற்றம்!
இந்நிலையில் கல்கி படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்புடன் தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் இடம்பெற்றிருக்கும் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது.
இதற்கு முன்னதாக சில போஸ்டர்கள் மற்றும் ப்ரோமோ வீடியோக்களை ஏற்கெனவே படக்குழு வெளியிட்டிருந்தாலும் இவை எதிலும் நடிகர் கமல்ஹாசனின் தோற்றம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று அவரது கதாபாத்திரத்தின் பின்பக்க வரைபடத்தை மட்டுமே படக்குழு பகிர்ந்திருந்தது.
இந்நிலையில் இன்று வெளியான இந்த போஸ்டரிலும் கமல்ஹாசன் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கினாலும் படக்குழு ஏதாவது வெயிட்டான அப்டேட் தருவார்கள் என நம்பிக்கையுடன் காத்துள்ளார்கள்.
இந்தியன் 2 Vs கல்கி 2898AD
மற்றொருபுறம் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பல ஆண்டுகள் உழைப்பு மற்றும் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படமும் ஜூன் மாதத்தில் தான் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு போஸ்டரில் அறிவித்திருநதது.
இந்நிலையில், கமல்ஹாசனின் இரண்டு பெரும் பட்ஜெட் திரைப்படங்கள் ஒரே மாதத்தில் நேருக்கு நேர் மோத உள்ள தகவல் அவரது ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.