கல்கி 2898 AD
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் கல்கி 2898. வைஜயந்தி மூவிஸ் சார்பாக அஸ்வனி தத் இந்தப் படத்தை சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வருகிறார். அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , ரானா டகுபதி , கமல்ஹாசன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
ஹைதராபாதில் நாளை அப்டேட்
இந்திய புராணக் கதையை மையப்படுத்தி சைன்ஸ்ச் ஃபிக்ஷனாக உருவாகி இருக்கும் கல்கி படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தீவிரப் படுத்தி வருகிறது. இதன் பகுதியாக இப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து கதாபாத்திரத்தில் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப் பட்டது. மேலும் அடுத்தடுத்து படம் பற்றிய பல சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு வெளியிட்டும் வருகிறது. தமிழ் , இந்தி , மலையாளம், தெலுங்கு இன்னும் ஒரு சில மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பலகோடிகளை செலவிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம் . சமீபத்தில் ஐ.பி.எல் போட்டியின் போது வெறும் 12 நொடி விளம்பரத்திற்காக 3 கோடி செலவிட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை கொடுக்கும் வகையில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளது படக்குழு. இந்த நிகழ்ச்சி நாளை மே 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மட்டும் உலகளவில் பல்வேறு இடங்களில் இருந்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் புஜ்ஜி என்கிற ரோபோட் ஒன்றையும் படக்குழு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ரோபோட் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது
கமல்ஹாசன் அப்டேட் வெளியாகுமா
கல்கி படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு, இப்படியான நிலையில் நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது, இது தவிர்த்து படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் பற்றிய அப்டேட் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம்