வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அறிவியல் புனைகதையை மையமாக வைத்து மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898 AD'. அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பாட்னி, ஷோபனா என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 27ம் தேதி பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ளது. 


 



கல்கி 2898 AD:


'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வர வர படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. பல நாட்களுக்கு முன்னரே துவங்கிய ப்ரீ புக்கிங் மூலம் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டுமே ரூ. 7 கோடி வரை ப்ரீ புக்கிங் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளது. தமிழ் நாட்டிலும் , கர்நாடகாவிலும் தலா 2 கோடி வரை டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. 


தெலுங்கானாவில் 'கல்கி 2898 AD' திரைப்படத்தை வெளியான முதல் வாரத்தில் கூடுதல் காட்சிகளும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையும் செய்ய தெலுங்கானா அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னர் வெளியான தகவலின் படி முதல் எட்டு நாட்களுக்கு முதல் காட்சி காலை 5:30 மணிக்கு திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது ஆனால் அதன் டிக்கெட் விலை சற்று உயர்த்தப்பட்டு இருந்தது ரசிகர்களுக்கு சங்கடத்தை கொடுத்தது. 


 



அதை தொடர்ந்து வெளியான அடுத்த அறிவிப்பில் ஹைதராபாத்தில் முதல் காட்சி காலை 4:30 மணிக்கு திரையிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும் ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்தன. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. 


சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தின் மிரட்டலான ட்ரைலர் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. டிக்கெட் முன்பதிவே 6 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.