தமிழ் திரையுலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. இந்த விழாவில் பலரும் நடிகர் ரஜினிகாந்த் எப்போது மேடையேறி பேசுவார் என ஆவலுடன் காத்து கொண்டு இருக்க படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மேடை ஏறி ஒரு கலக்கு கலக்கிவிட்டார். 


 



இசை வெளியீட்டு விழாவில் பேசிய கலாநிதி மாறன் "உண்மையாக இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த  அனைவரும் ரொம்ப சூப்பரா வந்துள்ளது என கூறியிருக்கிறார்கள். படத்தின் கதையை முதலில் ரஜினி சார் தான் கேட்டார். படத்தின் கதை மிகவும் அருமையாக இருக்கிறது என்று அவர் சொன்னார். இதற்கு முன் எந்திரன் படத்தின் கதை கேட்ட போது இப்படி கூறியிருந்தார். அனிருத் - நெல்சன் காம்போ என்றுமே ஒரு சூப்பர் காம்போ. நீங்க இரண்டு பெரும் சேர்ந்து ஏதாவது காமெடி படம் ட்ரை பண்ணலாம். அது தான் கைவசம் நிறைய கதை வைத்து இருக்கீங்களே.  


இப்படத்தில் இடம் பெற்று இருக்கும் ஹூக்கும் பாடல் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  எங்க தாத்தா, அப்பா, இப்போ நான் எனது மகன், எனது பேரன் என ஐந்து தலைமுறையாக இந்த பாடலின் லிரிக்ஸ்  போலவே ரஜினி சாரை ரசித்து கொண்டு இருக்கிறோம். "ரஜினி சார் ஒரு ரெக்கார்ட் பிரேக்கர் எல்லாம் கிடையாது அவர் ஒரு ரெக்கார்ட் மேக்கர்". அவருக்கு போட்டியே இல்லையா என நீங்கள் கேட்கலாம்.  தளபதி விஜய் சொன்ன மாதிரி அவருக்கு போட்டி அவரே தான். அவருக்கு போட்டி யாருமே இல்லை.


 



இதுவரையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்லது இனிமேல் வருபவர்கள் என அனைவருக்கும் ரஜினி சார் மாதிரி ஆக வேண்டும் என்ற கனவோடு தான் வருவாங்க. அது தப்பு இல்ல ஆனா அவரோட 70 வயசுல கூட ஒரு தயாரிப்பாளர் அவரை தேடி வாரங்க, அவரை மாதிரி ஸ்பீடான நடை, ரசிகர்கள் இன்றும் அவரின் படத்தின் ரிலீசுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியம். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான்" என கலக்கலாக பேசி அங்கு கூடியிருந்த  ரஜினிகாந்த் ரசிகர்கள் புல்லரிக்க வைத்து விட்டார். 


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.