கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கௌரி சீரியலில் நடித்த நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கலைஞர் டிவியில் கௌரி என்ற சீரியல் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை நந்தினி நடித்து வருகிறார். இந்த சீரியலில் கனகா மற்றும் துர்கா என இரட்டை வேடத்தில் நந்தினி நடித்து வருகிறார். இரண்டு கேரக்டரில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமானார். அவருக்கு தொடர்ச்சியாக பாராட்டுகளும் கிடைத்தது. இப்படியான நிலையில் நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கௌரி சீரியல் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது. 

நடிகை நந்தினிக்கு பூர்விகம் ஆந்திர மாநிலமாகும். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அவர் கன்னடத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார். அதன்மூலம் அவருக்கு தமிழில் கௌரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.  முதல் சீரியலிலே இரட்டை வேடத்தை நடத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

Continues below advertisement

இந்த நிலையில் கௌரி சீரியலின் ஷூட்டிங் ஆரம்பத்தில் பெங்களூருவில் தான் நடந்து வந்தது. இதனால் நந்தினியும் அங்கேயே வசித்து வந்தார். இப்படியான நிலையில் சமீபத்திற்கு சென்னை ஷூட்டிங் மாற்றப்பட்டது. அவரும் வந்து நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் சீரியலில் பிரேக் என்பதால் நந்தினி மீண்டும் சென்னையில் பெங்களூரு சென்ற நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பிரபல நடிகர் சதீஷ் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நந்தினி மிகவும் கலகலப்பான பொண்ணு. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. என்ன பிரச்னை என தெரியவில்லை. அவருக்கு ஏதாவது கஷ்டம் இருந்தால் மனசு விட்டு சக நடிகர்கள்கிட்ட பேசியிருக்கலாம். கௌரி ஷூட்டிங் குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)