காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜயண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி நடித்து முன்னதாக வெளியான பிரதர் , இறைவன் , சைரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின , இது தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்தார். காதலிக்க நேரமில்லை படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவி இதுகுறித்து பேசினார்.
இந்த ஆண்டு எழுந்து வருவேன்
" 2014 ஆம் ஆண்டு எனக்கு கொஞ்சம் தோல்வியான ஆண்டாக அமைந்தது. 3 வருடமாக ஒரே படத்தில் நடித்தேன். அதனால் என்னால் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க முடியவில்லை. என்னுடைய லுக் வெளியே தெரிந்துவிடும் என்கிற மாயையில் என்னை வைத்திருந்தார்கள். அந்த படமும் சரியாக போகவில்லை. அதனால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நான் ஏதாவது தப்பா நடித்திருக்கிறேனா. நான் தவறான கதையை தேர்ந்தெடுத்தேனா என்று யோசித்து பார்த்தேன். என்மேல் எந்த தப்பும் இல்லை. அப்புறம் நான் எதற்கும் துவண்டு போகனும் . வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் நான் ஒரே மாதிரி இருக்க கற்றுக் கொண்டேன். அடுத்த ஆண்டே தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , பூலோகம் என அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை கொடுத்தேன். கீழே விழுந்த ஒரு மனிதனை அவர் தோற்றுவித்தாக நாம் சொல்கிறோம். ஆனால் அவர் தோற்றுப்போனவர் இல்லை. கீழே விழுந்தும் எழுந்திருக்காமல் இருப்பவர் தான் தோற்றுப்போனவர்.
அதனால் இந்த ஆண்டு நான் நிச்சயம் எழுந்து வருவேன். அதற்கேற்ற மாதிரியான கதைகளில் தற்போது நான் நடித்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை , சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இந்த மாதிரி நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கு. இப்போது என்னால் ரொம்ப தெளிவாக சிந்திக்க முடிகிறது. சந்தோஷமாக இருக்கேன்." என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.