மலையாள மண்ணில் பிறந்து , இசை தாய்க்கு பிரியமான பிள்ளையாகிப்போனவர் கந்தர்வ குரலோன் கே.ஜே.யேசுதாஸ். தனிமை வாட்டும் போதெல்லாம் , தலையனை அருகே இருந்தபடி ஆறுதல் சொல்லும் மாய குரலுக்கு சொந்தக்காரன். உணர்வுகள் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டுமே , யேசுதாஸ் பாடல்கள் போதும் மெருகேற்றுவதற்கு. அவரின் பிறந்தநாளான இன்று அவர் கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பின் வாயிலாக திரும்பி பார்க்கலாம்..


இளமையும் இசையும் :


1940-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கேரளத்தின் கொச்சியில் எலிசபெத் ஜோசப்புக்கும்,  ஆகஸ்டின் ஜோசப்புக்கும் பிறந்தவர் யேசுதாஸ் . முழு பெயர் கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸ். குழந்தை பருவத்திலேயே  பாடும் திறமையை கொண்டிருந்தாராம் யேசுதாஸ். 5 வயதிலேயே அருமையாக பாடுவாராம். ஆரம்பத்தில் செவ்விசை கலைஞரும் நடிகருமான தனது தந்தை ஆகஸ்டின் ஜோசப்பிடம் இசையை கற்றுக்கொண்டு பின்நாட்களில் ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் சேர்ந்து முறையாக சங்கீதம் பயின்றுள்ளார்.




அதன் பிறகு உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸிற்கு தொடர்ந்து படிக்க பணம் இல்லாததால் இடைநிறுத்தம் செய்துள்ளார். ஆனால் பயின்ற சிறிது காலத்திலேயே  செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்மை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற இசை ஆசிரியர்களின் அன்புக்குறியவரானார்.



சினிமாவில் ஒலித்த கந்தர்வ குரல் ! 



1960 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமா ஒன்றில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது யேசுதாஸ் அவர்களுக்கு. அதன் பிறகு  தமிழ் சினிமாவும் யேசுதாஸை விட்டு வைக்குமா என்ன? 1963 ஆம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி திரைப்படத்தில் ‘ஆசை வந்த பின்னே‘ என்னும் பாடல் முதன் முதலாக யேசுதாஸ் குரலில் ஒலிக்க தொடங்கியது. யேசுதாஸை அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தர் அவர்களைத்தான் சேரும். 1964 ஆம் ஆண்டு அவரது  இயக்கத்தில் வெளியான பொம்மை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நீயும் பொம்மை..நானும் பொம்மை’ என்னும் பாடல்தான் யேசுதாஸின் முதல் பாடல் என்றாலும் , கொஞ்சும் குமரி முந்திக்கொண்டது. அதன் பிறகு இந்தி, தமிழ், மலையாளம் , தெலுங்கு , கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் , அரபி, லத்தீன் என பன்மொழியில் இசையிலும் பங்காற்றினார் இந்த  கான கந்தர்வன். இதுவரையில் யேசுதாஸ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் என்பது எத்தகைய சிறப்பு வாய்ந்தது.




தமிழ் சினிமாவும் யேசுதாஸும் ! 


ஆரம்ப நாட்களில் ஒரு சில தமிழ் பாடல்களை பாடி வந்த யேசுதாஸிற்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தியது. 1974 ஆம் ஆண்டு வெளியான உரிமை குரல் திரைப்படத்தில் விழியே கதையெழுது என்னும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் பெரும்பாலான பாடல்களை யேசுதாஸ்தான் பாடினார். மலரே குறிஞ்சி மலரே", "இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்" "ஒன்றே குலமென்று பாடுவோம்"  போன்ற பாடல்கள் இன்றும் பிரபலம். ரஜினி , கமல் என அடுத்த தலைமுறை தலையெடுத்தாலும் யேசுதாஸின் குரன் என்னவோ இளமையாகிக்கொண்டேதான் சென்றது.  ’அக்கரை சீமை அழகினிலே ’, ’செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ’, ’என் இனிய பொன் நிலாவே’,’கண்ணே கலைமானே ’, ‘ ஏரிக்கரை பூங்காற்றே ‘, ‘வாழ்வே மாயம் ‘ , ’ராஜ ராஜ சோழன் நான் ,’ பூவே செம்பூவே’ என்னும் யேசுதாஸின் குரலில் நீளும் எத்தனையோ பாடல்கள் , இன்றும் நம் நவயுக ஒலிப்பான்களில் ரீங்காரமிட்டுக்கொண்டுதானே இருக்கின்றன. மெல்லிசையிலேயே வருடி வந்த யேசுதாஸ் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் என்னும் பாடல் மூலம் ஒரு அதிரடி காட்டியிருப்பார் பாருங்கள்! . யேசுதாஸின் குரலை தன் இசைக்கு மெருகேற்ற பயன்படுத்திக்கொண்டார் இளையராஜா. இவர்களின் காம்போ எக்காலத்திற்கு டாப் நச்தான்!




தெய்வீக ராகம்! 


யேசுதாஸ் பிறப்பால் கிருஸ்தவர் . ஆனாலும் இந்து மத கடவுள்கள் மீது பற்றுடையவராகவே விளங்குகிறார். குறிப்பாக கேரளாவின் புனித தலங்களுள் ஒன்றாக அறியப்படும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், இவரின் குரல் ஒலிக்காமல் நடை சாத்தப்படாது. ‘ஹரிவராசனம் சுவாமி விஸ்வமோகனம் ‘ என பக்தர்களை டிவைன் மோடிற்கு எடுத்துச்செல்லும் யேசுதாஸின் தெய்வீக குரல்!. . அதுமட்டுமா `காயம்குளம் கொச்சுன்னி’ என்னும் மலையாளப் படத்தில் இஸ்லாமியர் வேடமணிந்து `நல்ல சுருமா’ என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இசைக்கு மொழியே கிடையாது என்பார்கள்! நம் யேசுதாஸ் குரலுக்கு மதம் முட்டுக்கட்டை போடுமா என்ன!   அவர் குரல் எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டு சிலாகிக்க செய்துக்கொண்டிருக்கிறார் .




அங்கீகாரம்! 


கிட்டத்தட்ட 14 மொழிகளில் அரை லட்சம் பாடல்களை பாடிவிட்டார் யேசுதாஸ். அவரை கௌரவிக்கும் விதமாக கேரளத்தில் 25 முறை, தமிழகத்தில் 5 முறை, ஆந்திரத்தில் 4 முறை என ஒவ்வொரு மாநில அரசும் நாற்பதிற்கும் மேற்பட்ட  மாநில விருதுகளை வாங்கியுள்ளார். 1975  ஆம் ஆண்டே “பத்ம ஸ்ரீ” விருதினை பெற்றார் யேசுதாஸ். அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகம்(1989), கேரளா பல்கலைக்கழகம்(2003), மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்(2009)  இவருக்கு இசைத்துறைக்கான டாக்டர் பட்டம் வழங்கி பெருமை படுத்தியது. அதுமட்டுமா !  1992  இல் இசைப்பேரரிஞர் விருது,1992 இல் சங்கீத் நாடக அகாடமி விருது , 2002 இல் “பத்ம பூஷன்” விருது, 2002-ல் `சங்கீத கலாசிகாமணி விருது , 2003 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது, 2017-ல் பத்ம விபூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகள்  ஆகிவை வழங்கப்பட்டன.




ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என ஏங்கிக்கிடக்கும் பாடகர்கள் இருக்கும் நிலையில் , இவர் வீட்டில் மட்டும் தேசிய விருதுகள் நிரம்பி வழிகின்றன.1972ல் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்கும், ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்கும், 1976ல் கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் ‘பாரதம்’ (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்பட பாடலுக்கும் என 8 தேசிய விருதுக்கு சொந்தக்காரர் கான கந்தர்வன் யேசுதாஸ் அவர்கள். 


யேசுதாஸின் இசைப்பயணம் இன்னும் பல அகவைகள் தழைத்தோங்க வாழ்த்துக்கள்!