தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடும் ஒரு திரைக்கதை வல்லுநர், திரைக்கதை மேதை மற்றும் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றால் எள்ளளவும் சந்தேகமின்றி அது இயக்குநர் பாக்யராஜ் தான். தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். 


குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சிக்கல்களை பற்றியும் திரைக்கதை அமைப்பது என்பது மாயாஜால கதைகளை காட்சி படுத்துவதை காட்டிலும் சவாலானவை. ஏனென்றால் இந்த கதைகள் நம்மையும் நம்மை சுற்றியும் அன்றாட வாழ்வில் நிகழ்பவை. இவை ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளாக  இருக்காது என்றாலும் அதனுடன் கற்பனையை சேர்த்து மெருகேற்றி பார்வையாளர்கள் ரசிக்கும் படி தொகுத்து வழங்குவது தான் ஒரு சிறந்த திரைக்கதையின் சிறப்பம்சம்.


 



அதில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் பார்வையாளர்களை அது கவர தவறிவிடும். அப்படி கதை சொல்லலில் பி ஹெச்.டி பெற்றவர் இயக்குநர் பாக்யராஜ். அப்படி அவரின் அழமான அழுத்தமான படைப்புகளில் ஒன்று தான் 1981ம் ஆண்டு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்த படம் தான் 'மௌன கீதங்கள்' திரைப்படம். இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  



மூன்றாவது படத்திலேயே புகழின் உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் பாக்யராஜ். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கணவன் தவறு செய்கிறான். அதை மனைவியிடம் குற்றவுணர்ச்சி தாங்காமல் உளறியும் விடுகிறான். அவனை மன்னிக்க மனமில்லாமல் கணவனை பிரிந்து செல்லும் மனைவிக்காக பொறுமையுடன் காத்திருந்து தன்னுடைய அன்பு மனைவிக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறான். பின்னர் ஒரு இடைவேளைக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைவது தான் 'மௌன கீதங்கள்' படத்தின் கதைக்களம். 


ஹீரோ ஹீரோயின் சந்திப்பு, காதல், திருமணத்திற்கு பிறகான ஊடல் கூடல், சூழ்நிலை காரணமாக உறவில் விரிசல், பிரிவு, இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திப்பு, மனமாற்றம், மீண்டும் உறவு கூடுவது இது தான் படத்தின் அடுத்தடுத்த கட்டம் ஆனால் அந்த கட்டமைப்பை நேராக சொல்லாமல் கலைத்து போட்டு அதில் நகைச்சுவை கலந்து ஸ்வாரஸ்யமாக ஒரு படைப்பாக கொடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 


 



படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் இருந்து படக்குழுவினரை அறிமுகம் செய்து வைப்பது என அனைத்திலுமே புதுமை தான். பாக்யராஜ் நடித்த மூன்றாவது படம் 'மௌன கீதங்கள்' என்றாலும் இது தான் அவர் முதன் முதலில் தன்னுடைய சொந்த குரலில் பேசி நடித்த படம். 


கங்கை அமரன் இசையில் மூக்குத்திப் பூமேலே, டாடி டாடி ஓ மை டாடி, மாசமோ மார்கழி மாசம் உள்ளிட்ட அனைத்து பாடல்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது. மிக பிரமாண்டமான வெற்றியை பெற்ற இப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த ஆல் டைம் பேவரைட் படங்கள் எல்லாம் ரீ மேக் செய்யப்படலாமே என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.