தமிழ் சினிமாவின் சகலகலா வித்தகரான கே.பாக்யராஜின் “அந்த 7 நாட்கள்” படம் வெளியாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 


ஆணிவேராக கொண்டாடப்படும் திரைக்கதையில் மேஜிக் செய்யும் அளவுக்கு திறமை வாய்ந்தவர் கே.பாக்யராஜ். நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, பதற வைத்து என உணர்வுகளை தட்டி எழுப்பும் சினிமாவுக்கு ரசிகர்களை தங்களை அர்ப்பணித்து விடுவார்கள். அந்த வகையில் சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் 1979 ஆம் ஆண்டு இயக்குராக அறிமுகமானார் பாக்யராஜ். 80 ஆம் ஆண்டில் ஒரு கை ஓசை படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


இப்படியான நிலையில் 1981 ஆம் ஆண்டில் பாக்யராஜ் இயக்கத்தில் மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு என 4 படங்கள் ரிலீசாகின. இதில் அந்த 7 நாட்கள் படத்தில் அம்பிகா, கல்லாப்பெட்டி சிங்காரம், ராஜேஷ், காஜா ஷெரீப் என பலரும் நடித்திருந்தனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


அந்த 7 நாட்கள் படத்தின் ஆரம்ப காட்சி திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா மணமேடையில் இருக்க, அவருக்கும் ராஜேஷூக்கும் கல்யாணம் நடக்கும். திருமணம் நடந்த அன்று அம்பிகா தற்கொலைக்கு முயற்சிப்பார். காரணம் கேட்க, பிளாஷ்பேக் காட்சிகளாக படம் விரியும். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து இசையமைப்பாளராகும் கனவோடு சென்னைக்கு வரும் பாக்யராஜ், அம்பிகாவின் வீட்டில் குடியேறுகிறார். இருவரும் காதலிக்க தொடங்கும் நிலையில், அம்பிகா குடும்பம் வறுமை காரணமாக ராஜேஷூக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். 


மனைவியின் காதலை அறிந்து கொண்ட ராஜேஷ் , அவரை பாக்யராஜூடன் சேர்த்து வைக்க நினைக்கிறார். ஆனால் பாக்யராஜ் கிளைமேக்ஸ் காட்சியில் சொல்லும் காதலியை ஏற்பாரா இல்லையா என வரும் இடத்தில் பேசும் ஒரு வசனம் எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாத வகையில் நமக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 


மறக்க முடியாத காட்சிகள் 


ஒருபக்கம் உதவியாளர் காஜா ஷெரீப், இன்னொரு பக்கம் வீட்டு உரிமையாளர் கல்லாப்பெட்டி சிங்காரம் என இரண்டு பக்கமும் நொந்து நூடுல்ஸ் ஆவார் பாலக்காட்டு மாதவனாக வரும் பாக்யராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த பாக்யராஜ் கேரளாவைச் சேர்ந்தவராகவும், கேரளாவைச் சேர்ந்த அம்பிகா தமிழ் பெண்ணாகவும் நடித்திருப்பது முரணாக இருந்தது. 


பட்டினியில் இருந்து தப்பிக்க துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக்கொள்வது தொடங்கி, தன் முயற்சியில் சற்றும் தளராத நபர் வரை பேச்சுலர் வாழ்க்கையை காமெடியாக கலந்துக்கட்டி ரசிக்க வைத்தார் பாக்யராஜ். கொலு பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, பாடல் வரிகள் மூலம் காதல் சொல்வது என சீன் பை சீன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்களும் பட்டையை கிளப்பியது. எல்லோரும் கிளைமேக்ஸ் காட்சியில் பாக்யராஜூம், அம்பிகாவும் சேர வேண்டும் என ரசிகர்கள் நினைக்கும் நிலையில், அங்கு திரைக்கதையில் பாக்யராஜ் செய்த மேஜிக் காலத்துக்கும் மறக்க முடியாது என்பதே நிதர்சனம். இப்படம் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.