கடந்த ஒரு வருடமாக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உடல்நலன் சார்ந்த வீடியோக்களை வெளியிடும் ஜோதிகா, சுதந்திர தின செய்தி ஒன்றை கொடுத்துள்ளார்.






அதில் “இந்த சுதந்திர நாளில், நாம் அனைவரும் பிறரை சாராமல் நிற்கும் தன்மையை பெற உறுதியெடுப்போம்” என்று பதிவு செய்து தன் அசுர வேக உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.


சமீபத்தில் Kaathal The Core திரைப்படத்துக்காக ஃபிலிம்பேர் விருது வென்றார் ஜோதிகா.



ஜோதிகாவின் உடற்பயிற்சி முயற்சிகள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட திரை விமர்சகர் ஜாக்கி சேகர், “நான்கு வருடங்களுக்கு முன்பாக விருது வழங்கும் விழாவில் தஞ்சாவூரில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பகிர்ந்து கொண்டார். பிரகதீஸ்வரர் ஆலயம் ரொம்ப பிரபலமானது. அந்த கோவிலை பார்க்காமல் நீங்கள் செல்ல வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். மறுநாள் அரசு மருத்துவமனைக்கு படப்பிடிப்புக்காக சென்றேன். மிகவும் மோசமாக இருந்தது தஞ்சாவூர் மருத்துவமனை. கோவிலுக்கு நாம் பெயிண்ட் அடிக்க புனரமைக்கப்பட செலவிடப்படும் தொகையைப் போல, கோவில் உண்டியலில் போடப்படும் தொகை போல, மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் நாம் தாராளமாக நன்கொடை தர வேண்டும், அது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று பேசியதோடு, அதன் பிறகு நான் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு செல்லவில்லை என்பதுதான் நான்கு வருடத்திற்கு முன்பாக ஜோதிகா பேசிய பேச்சு.

 



அப்போதே ஜோதிகா வறுத்தெடுக்கப்பட்டார். இத்தனைக்கும் அவர் கணவர் அகரம் பவுண்டேஷன் நிறுவி நிறைய ஏழை எளிய கல்விக்காக எண்ணற்ற உதவிகளை செய்யும் நிலையில், தனது கணவருடன் சேர்ந்து செய்து வருகிறார். அவருடைய பேச்சில் கோயில்களுக்கு பணம் செலவிட வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. கோவில்களுக்கு செலவிடப்படும் தொகை போல, மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் நன்கொடையை தாராளமாக வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னார்.

 



அதன்பிறகு அவர் எந்த செயல் செய்தாலும், கோயில் கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? மருத்துவமனை கட்டிக்கொடுக்க வேண்டியதுதானே? என்று எச்சை கையால் கூட காக்கா ஓட்டாத கூட்டத்தினர் ரவுண்டு கட்டினார்கள். அவர் பேசி நான்கு வருடம் ஆகிவிட்டது. இப்போது அவருடைய உள்ளாடை மற்றும் அதன் விலையை பற்றி எல்லாம் பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கோவில் கட்டி கொடுக்க வேண்டியதுதானே ஸ்கூல் கட்டி கொடுக்க வேண்டியதுதானே என்றுதான் பேசி வருகிறார்கள். சிவகுமார் குடும்ப மானத்தை வாங்கி விட்டார் என்று ஒரு பின்னூட்டத்தை பார்த்தேன். ஆடு நனையுதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதைதான். அவருக்கு அந்த உடை பிடித்திருக்கிறது. அவர் அணிந்து வருகிறார். இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் தெரியவில்லை? பிலிம் பேர் விருந்துக்கு வந்த எல்லா நடிகைகளும் அப்படித்தான் உடை அணிந்து வந்திருந்தார்கள். ஆனால் ஜோதிகா உடை மட்டும் விமர்சிக்கப்பட காரணம் அவர் கோவில்போல மருத்துவமனையும் பள்ளியும் ரொம்ப முக்கியம் என்று பேசியதுதான்.



 

திருமணமான பெண்கள்... பிள்ளை பெற்ற பெண்கள்... இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லைகளை உடைத்தமைக்கு ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார்