ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபல மலையாள படமான ‘2018’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக இந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் சில படங்கள் அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படும். தற்போது அதிகரித்து வரும் பான் இந்தியா கலாச்சாரம் அதற்கு சரியாக அடித்தளமிட்டு வருகிறது. மேலும் ஓடிடி தளங்களின் வருகை சினிமா ரசிகர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம். இருந்த இடத்தில் இருந்தே, உலக மொழி படங்களை மொபைல் போன் மூலமாகமே நாம் பார்க்க முடியும். 


இப்படியான நிலையில் மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான படம் “2018”.தியேட்டரில் வெளியான இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நோபின் பால் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. 


கேரளாவில் அந்த மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தையும், அதனை மக்கள் ஒற்றுமை எப்படி எதிர்கொண்டது என்பதையும் மிக உணர்வுப்பூர்வமாக படமாக்கியுள்ளனர். அந்த ஒருவார காலம் மக்கள் பட்ட இன்னல்களையும் எதார்த்தம் மாறாமல் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் படமாக்கியுள்ளார். 


இந்த படம் ரிலீசான தினத்தில் இருந்தே ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பி வரும் 2018 படம் கேரளாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதேபோல் கேரளாவில் இப்படம் 11 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனைப் படைத்தது. 


இதுவே மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படமாகும். இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து கடந்த 26ம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே 2018 படம் ஓடிடி தளத்தில் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் இதுவரை 150 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Captain Miller Update: வசூலை அள்ள தனுஷ் போட்ட பிளான்.. வெளிநாட்டில் கேப்டன் மில்லர் ஆடியோ லாஞ்ச்..? திட்டம் என்ன..!